2514.நந்தியம் பதியிடை, நாதன் பாதுகம்
செந் தனிக் கோல் முறை செலுத்த, சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்,
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்.

     அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான் - இரவும் பகலும்
ஓயாமல் அழுதுகொண்டுள்ளநீர் நீங்காத கண்ணை உடையனாய் (பரதன்);
நந்தியம் பதியிடை- நந்திக்கிராமத்திடத்தே; நாதன் பாதுகம்- இராமன்
திருவடிநிலை; செந்தனிக் கோல் முறைசெலுத்த - செங்கோல் முறையைச்
செய்ய; சிந்தையான் - மனத்தினால்; இந்தியங்களை - ஐம்பொறிகளையும்;
அவித்து - புலனின்பம் நுகராதவாறு அடக்கி; இருத்தல் மேயினான் -
அங்கேயே தங்கியிருத்தலைப் பொருந்தினான்.

     நந்தியம்பதி - அயோத்திக்குப் புறம்பே அண்மையில் உள்ள ஊர்.
நந்திப் பதி - ‘அம்’சாரியை.                                    140