அனுமன் - அங்கதர் தோள்களில் முறையே இராம-இலக்குவர்
 

8458.

மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத் தோள்மேல்
வீரனும், வாலி சேய்தன் விறல் கெழு சிகரத் தோள்மேல்
ஆரியற்கு இளைய கோவும், ஏறினர்; அமரர் வாழ்த்தி,
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர், இடைவிடாமல்.
 

மாருதி அலங்கல் மாலை  மணி அணி  வயிரத்தோள்   மேல்
வீரனும்
  -  அனுமனுடைய  அசைந்தொளிரும்  இயல்பினவாகிய  மலர்
மாலையும்  மணிகளும்  அணிந்த திண்ணிய தோளின் மேல்  வீரனாகிய
இராமனும்; வாலி  சேய்  தன்  விறல் கெழு சிகரத் தோள்மேல் -
வாலி மைந்தன்  அங்கதனுடைய  வெற்றித் திறன் பொருந்திய   மலைச்
சிகரத்தை   ஒத்த  தோளின்  மேல்;  ஆரியற்கு  இளையகோவும் -
(இராமன் என்னும்) பெரியோனுக்குத்தம்பியாகிய இலக்குவனும்;  ஏறினர்
-  (போர்  மேற்செல்ல)  ஏறி  அமர்ந்தனர்;  அமரர் வாழ்த்தி, வேரி
அம்பூவின்  மாரி   சொரிந்தனர்,  இடைவிடாமல்
-   (அதுகண்டு)
தேவர்கள் (அவ்விருவரையும்) வாழ்த்தித் தேன் நிறைந்த அழகிய   மலர்
மழையினை இடைவிடாது சொரிந்தார்கள்.
 

                                                  (18)