9869.

மஞ்சு அரங்கிய மார்பினும், தோளினும்,

நஞ்சு அரங்கிய கண்ணினும், நாவினும், 

வஞ்சன் மேனியை, வார் கணை அட்டிய 

பஞ்சரம் எனல் ஆம் படி பண்ணினான். 

 

மஞ்சு அரங்கிய மார்பினும் தோளினும்- (நிறத்தால்)
மேகத்தைத்  தோல்வியுறச்  செய்த  மார்பிலும்  தோளிலும்;
நஞ்சு  அரங்கிய  கண்ணினும் நாவினும் - நஞ்சினைத்
தோல்வியுறச்  செய்த  கண்களிலும்   நாவிலும்;  வஞ்சன்
மேனியை
-  (வேறு பிற உறுப்புக்களிலுமாக) வஞ்சகனான
இராவணன் உடம்பினை; வார்கணை அட்டிய-(அம்புகளை
விடுத்து) நீண்ட அம்புகள் வைத்திருப்பதற்கேற்ற; பஞ்சரம்
எனலாம்  வகை  பண்ணினான்
- கூடு  (தூணி)  என்று
கூறலாம்படி செய்தான்.
 

பஞ்சரம் - கூடு. இங்கு  அம்பறாத் தூணி.  இராமனின்
அம்புகள்  ஆயிரக்கணக்காகப்  புறப்பட்டமையால், அவன்
முதுகிலிருந்த    சிறிய   அம்பறாத்தூணி   போதாமையால்
அவ்வம்புகளை  வைக்க  இராவணனின்  உடம்பை, பெரிய
அம்பறாத் தூணியாக்கினான் எனும் நயந்தோன்றக் கூறினார்.
 

(166)