9733.

ஐயன் ஐம் படைதாமும் அடித் தொழில் 

செய்ய வந்து அயல் நின்றன; தேவரில் 

மெய்யன் அன்னவை கண்டிலன், வேதங்கள் 

பொய் இல் தன்னைப் புலன் தெரியாமைபோல். 

 

ஐயன்- திருமாலின்; ஐம்படை தாமும் - சங்கு, சக்கரம்,
கதை, வாள், வில் என்ற ஐந்து படைகளும்; அடித் தொழில்
செய்ய
- (தம் தலைவனுக்குத்) தொண்டு செய்யும் பொருட்டு;
அயல்  நின்றன - பக்கத்தில்  காத்து  நின்றன; (ஆனால்),
வேதங்கள் - மறைகள்; பொய்யில் தன்னை - பொய்யற்ற
மெய்யான  தன்னை; புலன் தெரியாமை போல் - (மானிட
வடிவெடுத்த  அவனை)  அறிந்து  கொள்ளாதவாறு  போல;
அன்னவை
-  அவ்வைம்படைகளை;தேவரில் மெய்யன்-  
தேவர்களுள்  மெய்ப்பொருளாயுள்ள  திருமால்; கண்டிலன்
காணவில்லை.
 

தானெடுத்த வேடத்தை வேதங்கள் எப்படி அறியவில்லையோ
அது போன்ற மனித அவதாரமெடுத்த தான் ஐம்படைகளையும்
அறியவில்லை.
 

ஐம்படைகளாவன: சுதரிசனம் (சக்கரம்), பாஞ்சன்னிபம்
(சங்கு), கௌமோதகி (கதை), நாந்தகம் (வாள்), சார்ங்கம்
(வில்)
 

புலன் தெரிதல் - உண்மை அறிதல்.
 

(30)