தொழ - (அத்துறவியை)வணங்க, ஆசிஉம் உரைத்தான் - (அம் மன்னவனுக்கு அந்தத்துறவியும்) வாழ்த்துங் கூறினான்; (எ - று.) தருமன்விராடநகரத்தில் வேத்தவையிற்புகுமுன் தாபதவடிவு கொள்ள, அவனைத் தம்பியர் வணங்கினர்: பின்னர் விராடனவைக்கு அவ்யுதிஷ்டிரன் சென்றானென்க. அங்ஙன் உம்பரும் வியப்பத் தருமன் தாபதவுருக்கொண்டபோது கங்கனென்ற பெயரைச் சூடினமை, இரண்டாமடியிற் பெறப்படும். இனி, நால்வர் சூழவிருந்து வணங்காவிடின் மதிப்பு உண்டாகாதாதலால், தருமன் தாபதவுருக்கொண்டு வேத்தவைக்குச் சென்றபோது தம்பியர் வணங்கிச் சூழஇருந்தனரென்பாரு முளர்: அது, தனித்தனியே, சபைக்குத் தம்பியர் செல்வதாகக் கூறுவதோடு முரணாம். புலன்-பொறிக்கு இலக்கணை. வந்து - அசையுமாம். ஆசி=ஆஸிஸ்: வடசொல். (11) 12.-தாபதவுருக்கொண்ட தருமனைவணங்கிய விராடனது வினாவும், அதற்கு அத்தருமன் இறுத்த விடையும். யாரையாநீவிரெங்குநின்றிவண்மற்றெழுந்தருளியதெனவினவப் பாரையாளுடையவுதிரட்டிரன்பாங்காய்ப்பயின்றனனவன்பெருவனத்திற் சேருநாளுடன்போய்த்திரிந்தனனின்பாற்சில்பகல்வைகுமாறெண்ணி வீரவார்கழலாய்வந்தனெனென்றான்வேள்வியாற்கேள்வியான்மிக்கோன். |
(இ -ள்.) 'ஐயா-! நீவிர் யார்-? எங்குநின்று இவண் எழுந்தருளியது- எவ்விடத்தினின்று இங்கு வந்தது? என வினவ - என்று (தாபதவுருக்கொண்டிருந்த தருமபுத்திரனை விராடராசன்) விசாரிக்க,- வேள்வியால் கேள்வியால் மிக்கோன் - யாகஞ்செய்தலிலும் சிறந்தநூற்கேள்வியைப் பெரியோரையடுத்துக்கேட்டலிலும் மிக்கவனான அந்தத் தருமபுத்திரன்,- (விராடனைநோக்கி),- 'வீரம் வார் கழலாய் - வீரத்திற்கு அறிகுறியாகத் தரித்த நீண்ட கழலைப் பூண்டவனே! பாரை ஆள் உடைய - பூமியையாளுதலையுடைய, உதிட்டிரன் - தருமபுத்திரனுக்கு, பாங்குஆய் - தோழனாய், பயின்றனன் - பழகியிருந்தேன்: அவன் பெரு வனத்தில் சேரும் நாள் - அவன் பெரிய காட்டிலே சேரும்நாளிலே, உடன் போய் திரிந்தனன் - அவனுடன் கூடவே போய்த் திரிந்தேன்: நின்பால் சில் பகல் வைகும் ஆறு எண்ணி வந்தனென் - உன்னிடத்துச் சிலநாள் தங்கும்படி யெண்ணி இப்போது வந்துள்ளேன்,' என்றான் - என்று விடை கூறினான்; (எ - று.) பாங்கு- அருகில் எனினுமாம். இங்குத் தருமபுத்திரன் விராடனிடத்துக் கூறுவதில் மெய்ம்மைப் பொருள் தோன்றுமாறும் அமைந்திருத்தல் காண்க: அதுவருமாறு:-உதிட்டிரன் அவன் - யுதிஷ்டிரனாகிய அன்னான், பாங்குஆய் - சௌக்கியமாக, பயின்றனன் - (நாட்டில்) தங்கியிருந்தவன்,- பெருவனத்தில் சேரும்நாள்-, உடன் - தன்துணைவரோடு, போய்-(நாட்டை விட்டுச்)சென்று, திரிந்தனன்-: (அவன்), நின்பால் சில்பகல் வைகுமாறு எண்ணி-, வந்தனன் - வந்துள்ளா னென்பது. மற்று-அசை. (12) |