சினேகிதர்களும், தன் சூழஉம் - தன்னைச்சூழ்ந்திருக்கவும், விரைகாலும் மலர் ஓடை எனும் ஆறு - வாசனை வீசுகின்ற மலர்களையுடைய நீரோடை யென்று உவமைகூறும்படி, இருக்கும்-(தெளிவும் குளிர்ச்சியுமுடையவனாய்) அரசுவீற்றிருக்கின்ற, விராடற்கு - விராடராஜனுக்கு,-தெவ்வர் - பகைவர்கள் [திரிகர்த்தன் முதலியோர்], நிரை கொண்டது - பசுக்களைக் கவர்ந்துசென்ற செய்தியை, பணிந்து ஓதினார் - வணங்கிச் சொன்னார்கள்; (எ - று.) குறைகூறும் குடிகள்பால் முகமலர்ச்சியையும் தண்ணளியையும் மாறாமலுடையவ னென்பது, 'விரைகாலுமலரோடையெனுமாறிருக்கும் விராடன்' என்பதன் கருத்து; உருவகவணி. 'மலரோடை' என்றதனால் அவனதுசேனையுங்கேளிரும் அவனைப் பிரியாதுநின்று அவனுக்கு நேரும்இன்ப துன்பங்களை அவனோடொக்கஅனுபவிக்கும் பேரன்புடையவரென்பதும் தோன்றும். 'இரட்டுறமொழிதல்' என்ற உத்தியால், 'கேளிர்' என்ற சொல்லுக்கு - உறவினரும் நண்பரு மென இருபொருள் ஒருங்கு கொள்ளப்பட்டது. சேனைக்குக் கடல்ஒப்பு - மிக்கபரப்புக்கும் ஆரவாரத்துக்கும், அச்சந் தருதற்கும், அணியணியாக வருதற்கு மென்க. கை - பக்கம்; இனி, உபசர்க்கமாகவுங் கொள்ளலாம். தமது புயவலியாலும் மனவலியாலும் பகைவரைவென்று அரசாள்பவ ரென்பது விளங்க, 'தரைகாவல் பெறு தோளினாண்மைப் பெருங்கேளிர்' என்றார். ஓடை - நீரோடுமிடம்.(168) 10.-அதுகேட்ட விராடன்சேனையைப் போர்க்குச் சித்தப்படுத்துதல். செருமிக்கபடையோடுசதியாகமதியாதுதிரிகத்தர்கோன் நிருமிக்கவொட்டாதவென்பூமிதனில்வந்துநிரைகொள்வதே பருமிக்கமதயானைதேர்வாசியாளின்னபண்செய்யுமென்று உருமிக்கமுகில்போலுரைத்தானொ ரக்குரோணியுளதானையான். |
(இ -ள்.) (அதுகேட்டு),-ஒர் அக்குரோணி உள தானையான் - ஓர் அகௌஹிணியென்னுந் தொகையுள்ள சேனையை யுடையவனான விராடராஜன்,- (தன்சேனைத்தலைவர்களைநோக்கி), 'திரிகத்தர்கோன்- திரிகர்த்தராசன், மதியாது-(நம்மிடத்துச் சிறிதும்) மதிப்புக் கொள்ளாமல் [மிகவும் அலக்ஷ்யமாய்], செரு மிக்க படையோடு-போர்த்தொழிலில் மிக்க (தனது) சேனையுடனே, நிருமிக்க ஒட்டாத என் பூமிதனில்-(வேறுயாவரும்) நியமிக்கவொண்ணாத (காவலையுடைய) எனது நாட்டில், சதி ஆக- வஞ்சனையாக, வந்து-, நிரைகொள்வதுஏ - பசுக்களைக் கவர்ந்து கொண்டு போவதா? (அந்நிரையை மீட்குமாறு நீங்கள்), பரு மிக்க மதம் யானை - பருத்துள்ளவையும் மிக்க மதத்தையுடையவையுமான யானைகளும், தேர் - தேர்களும் வாசி-குதிரைகளும், ஆள்-காலாள்களும், இன்ன-என்னும் இச்சதுரங்கசேனைகளையும், பண் செய்யும்-அணிவகுத்துப் போர்க்குச் சித்தஞ்செய்யுங்கள்,' என்று-, உரும் மிக்க முகில்போல்-இடிமிகுந்தமேகம்போல, உரைத்தான் - சொன்னான்; (எ - று.) |