இதுமுதற் பதினான்கு கவிகள் - தென்புறத்து நிரைமீட்சி கூறுகின்றார். தான் அறியாதபடி திரிகர்த்தராஜன் வந்து பசுக்களைக் கவர்ந்தமையால் சினந்து, பெருங்குரலுடன், தன் சதுரங்கசேனைகளைப் போர்க்குச் சித்தஞ்செய்யுமாறு விராடராஜன் கூறினனென்க. நிருமிக்க வொட்டாத பூமி - (எவராலும் இங்ஙனம் பிற இடங்களில்) உண்டாக்கமுடியாத (வளங்களையுடைய) நாடுஎன்றுமாம். பருமிக்க-பருமை மிகுந்தவென்றுமாம்; வியங்கோள் வினைமுற்றாகக் கொண்டு, மதயானைகளை அலங்கரிக்க வென்றலுமாம்; பருமம் - யானைமேற்றவிசு: பருமித்தல்-தவிசிட்டு அலங்கரித்தல். பண்செய்தல்- அலங்காரஞ் செய்தலுமாம். 'ஆள்' என்ற சொல் உயர்திணையாயினும், யானை தேர் வாசி என்ற மூன்று அஃறிணைச்சொற்களோடு சேர்த்து நிறுத்தப்பட்டதனால், மிகுதிபற்றி 'இன்ன' என்ற அஃறிணைமுடிபைக் கொண்டது. இனி, 'ஆள்' என்றது - காலாட்சேனையையுணர்த்து வதெனக்கொண்டு அதனை அஃறிணையின்பாற்படுத்துதலு மொன்று. (169) 11.-விராடன் தன்சேனையுடனேதிரிகர்த்தன்சேனையை நெருங்குதல். ஒண்டூளிவானம்புதைக்கப்பல்லியசாலமொலிபட்டிடத் திண்டூசியணியாகநிரைகொண்டவெஞ்சேனைசென்றெய்தினான் ஞெண்டூரும்வயறோறும்வளைநித்திலஞ்சிந்திநிலவூரவே வண்டூதமலருந்தடம்பொய்கைசூழ்மச்சவளநாடனே. |
(இ -ள்.) ஞெண்டு ஊரும் - (நீர்வளத்தால்) நண்டுகள் ஊர்ந்து செல்லப்பெற்ற, வயல்தோறும் - கழனிகளிலெல்லாம், வளை - சங்குகள், நித்திலம் சிந்தி - முத்துக்களைப் பெற்றதனால், நிலஊரவே - சந்திரகாந்திபோன்ற வெள்ளொளி பரவவே, (அதனால்), வண்டு ஊத-வண்டுகள் வந்து ஊதும்படி, மலரும்-(அரும்புகள்) மலரப்பெற்ற, தட பொய்கை - பெரிய தடாகங்கள், சூழ் - சூழ்ந்த, மச்சம் வளம் நாடன் - வளமுள்ள மச்சமென்னும் நாட்டையுடையவனான விராடராஜன்,-ஒள் தூளி-(சேனைகள் செல்வதனால் எழுப்பப்பட்ட) ஒள்ளிய [மிகுதியான] புழுதி, வானம் புதைக்க-ஆகாயத்தை மறைக்கவும், பல் இயம் சாலம் ஒலி பட்டிட - பலவகைவாத்தியங்களின் கூட்டம் ஒலிசெய்யவும், திண் தூசி அணி ஆக - வலியசேனை அணிவகுக்கப்பட்டுச் செல்லவும், சென்று - போய், நிரைகொண்ட வெம் சேனை - பசுக்களைக் கொண்டுபோன கொடிய திரிகர்த்தன் சேனையை, [முறையே முன்] எய்தினான் - சந்தித்தான்; கொட்டுவனவும் ஊதுவனவும் எழுப்புவனவுமாகிய தோற்கருவி துளைக்கருவி நரப்புக்கருவி கஞ்சக்கருவி யென்பன வெல்லாம் அடங்க, 'பல்லியசாலம்' என்றார். தூசி - முந்துற்றுப் பொருபடை; முன்னணிச்சேனை. வயல்களிற் சங்குகளும் முத்துக்களும் வீசுகின்ற வெண்மையான காந்தியை நிலா என்று மயங்கி ஆம்பல் முதலிய சில நீர்ப்பூக்கள் மலரு மென மயக்கவணியாகக்கருத்துக்கொள்க. சங்கு |