பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 107

முதலியவற்றினின்று முத்துப்பிறக்கு மென்பதை, "தந்தி வராகமருப் பிப்பி
பூகந்தழைகதலி, நந்து சஞ்சல மீன்றலை கொக்குநளினமின்னார், கந்தரஞ்சாலி
கழை கன்ன லாவின் பல் கட்செவிகா, ரிந்துவுடும்பு கரா முத்தமீனு மிருபதுமே"
என்பதனாலும் அறிக.  நிலவளத்துக்குக் காரணமான நீர்வளமிகுதியால் எங்கும்
பலவகை மீன்கள் மலிந்திருத்தல் பற்றி, மத்ஸ்யதேச மென்று அந்நாட்டுக்குப்
பெயர்வந்தது போலும்; அதற்குஏற்பவே, பின்னிரண்டடியில் நீர்வளச்சிறப்பே
கூறப்பட்டது.

      நண்டுஎன்பதன் போலியாகிய ஞண்டு என்பது - இங்கு மோனைப்
பொருத்தம்நோக்கி ஞெண்டெனத் திரிந்து வந்தது.  பொய்கை-மானிடராக்காத
நீர்நிலை; ஸரஸ்.  மச்சம்=மத்ஸ்யம்.  மலரும் பொய்கை - பெயரெச்சம்,
இடப்பெயர்கொண்டது.  வளை - வலம்புரியாகவாயினும் இடம்புரியாகவாயினும்
உள்ளே வளைவுபெற்றுள்ளதென ஏதுப்பெயர்.                     (170)

12,-அருச்சுனனொழிந்தபாண்டவர்நால்வரும் விராடனுடன்
செல்லுதலும்,திரிகர்த்தன்சேனை புறங்கொடுத்தலும்.

உட்பேடியாய்வைகும்விற்காளையல்லாதவொருநால்வரும்
நட்பேறுபூபாலனுடனேகினார்போர்நலங்காணவே
கொட்பேறிநிரைகொண்டவெஞ்சேனையுஞ்செல்கொடுஞ்சேனையும்
பெட்பேறியமர்செய்யமுன்னிட்டகுருசேனைபின்னிட்டதே.

      (இ -ள்.) (அப்பொழுது),-பேடி ஆய் - (ப்ருஹந்நளையென்னும்)
நபும்ஸகவடிவமாய், உள் - உள்ளே [உத்தரையினது கன்னிமாடத்தில்], வைகும்
- தங்கியிருக்கிற, வில் காளை அல்லாத - விற்போரில்வல்ல அருச்சுன
னொழிந்த, ஒரு நால்வர்உம் - (மற்றையுதிட்டிரன் பீமன் நகுலன் சகதேவன்
என்னும்) நான்குபேரும், போர் நலம் காண - யுத்தத்தின் சிறப்பைப்
பார்ப்பதற்காக, நட்பு ஏறு பூபாலனுடன் - (தம்மிடத்துச்) சினேகம் மிகுந்த
விராடராசனுடனே, ஏகினார் - சென்றார்கள்; (பின்பு),-கொட்பு ஏறி -
வளைத்துக்கொண்டு, நிரை கொண்ட - பசுக்களைக் கவர்ந்த, வெம்சேனைஉம்-
கொடிய (திரிகர்த்த) சேனையும், செல் கொடுஞ் சேனைஉம்-(அதனை அழித்த
நிரைமீட்கச்) சென்ற பயங்கரமான (விராட) சேனையும், பெட்பு ஏறி - (தாம்
தாம் வெற்றிபெறவேண்டுமென்னும்) விருப்பம் மிகுந்து, அமர் செய்ய -
(ஒன்றோடொன்று) போர்செய்யாநிற்க, -.(அப்போரில்),-முன்னிட்ட குரு சேனை
- முன்னேவந்த கௌரவசேனை, பின்னிட்டது - முதுகுகாட்டி ஓடியது
[தோற்றது]; (எ - று.)

     குருஎன்பவன், சந்திரவமிசத்துப் பேர்பெற்ற ஓர் அரசன்; இவனால்
அக்குலம் குருகுலமென்றும், அந்நாடு குருக்ஷேத்திரமென்றும், அச்சந்ததியார்
கௌரவரென்றும் பெயர்பெற்றவாறு காண்க.  இங்கு, அவன் வமிசத்துத்
தோன்றிய துரியோதனாதியரது