கோ நிரை -(இடையர்கள் பால்கறக்கப் பிடிக்கின்ற) குடங்களை நிரப்புவனவாகிய குவிந்த முலைகளையுடைய பசுக்களின் கூட்டங்களை, மீட்பான் - (பகைவரினின்று) மீட்டுக்கொண்டு வருதற்பொருட்டு, தென் திசை சென்றான் - தெற்குப் பக்கத்துக்குப் போனான்: (இப்படிப்பட்ட சமயத்தில்), மாசுணம் கொடியோன் - சர்ப்பத்தின் வடிவமெழுதிய கொடியையுடையவனான துரியோதனனது, அடல் வயம் படை - வலிமையையும் வெற்றியையுமுடைய சேனை, வடதிசை புலம் முழுவதும் - (ஊர்க்கு) வடக்குப் பக்கத்தினிடம் முழுவதும், ஆழியின் - கடல்போல, பரந்ததை - பரவிற்று; (எ - று.) தென்புறத்தில் பசுநிரை மீட்கச்சென்ற சமயம் பார்த்து, வடபுறத்து ஆனிரை கவருமாறு துரியோதனன் சேனை பரவிற்றென்றனர் ஆயரென்க. ஒவ்வொருமுலையும் குடம்குடமாகப் பால் சொரியுமென, பசுக்களின் சுரப்பு மிகுதி கூறியவாறு; "சீர்த்தமுலைபற்றி, வாங்கக் குடநிறைக்கும் வள்ளற் பெரும்பசுக்கள்" என்றார் பெரியாரும். அன்றே - ஈற்றசை. பரந்ததை-ஐ, சாரியை. (185) 27. | நாட்டிலுள்ளனபலன்களுங்கவர்ந்தனர்நறுந்தண் காட்டிலுள்ளனசுரபியின்கணங்களுங்கவர்ந்தார் கூட்டிலுள்ளுறைகலுழனின்குஞ்சுபோலினிநீ வீட்டிலுள்ளுறைகின்றதென் வேந்தன்மாமதலாய். |
(இ -ள்.) வேந்தன் மா மதலாய் - விராடராசனது சிறந்த குமாரனே!- (துரியோதனாதியர்), நாட்டில் உள்ளன - (நமது) தேசத்திலுள்ளவையாகிய, பலன்களும் - (தானியம் முதலிய) விளைபயன்களையும், கவர்ந்தனர் - ஒழித்துவிட்டார்கள்; நறுந் தண் காட்டில் உள்ளன - (நாட்டையடுத்த) நல்ல [செழித்த] குளிர்ச்சியான காட்டில் உள்ளவையாகிய, சுரபியின் கணங்களும் - பசுக்களின் கூட்டங்களையும், கவர்ந்தார் - கொள்ளை கொண்டார்கள்; இனி - இங்ஙனங் கொண்டு போனபின்பும், நீ -, கூட்டில் உள் உறை கலுழனின் குஞ்சுபோல் - (வெளிப்பட்டுத் தன்பகையாகிய பாம்புகளை வெல்லாமற்) கூட்டினுள்ளே அடைந்து கிடக்கின்ற கருடப்பறவையின் குஞ்சு போல, வீட்டில் உள் உறைகின்றது - வீட்டிற்குள்ளேயே வாசஞ் செய்து கொண்டிருக்கின்றது, என் - என்னே? (எ - று.) பறவைக்கரசனாகிய கருடன் பாம்புகளை அழிக்குமாறுபோல ராஜகுமாரனாகிய நீயும் வெளிப்பட்டு வந்து பாம்புக்கொடியோனாதியரை அழிக்க வேண்டாவோவென்றார்; உவமையணி. மேல்'மாசுணக்கொடியோன்' என்று பகைவனைக்குறித்து, இங்கு 'கலுழனின் குஞ்சு போல்' என்று உத்தரனுக்கு உவமைகூறியது - உன்தந்தையைப் போலவே உன்னையுங் கண்டமாத்திரத்திலே அப்பகைவர் ஒடுங்கி யொழிவ ரென்று குறிப்பித்து உத்தரனை உத்ஸாஹப்படுத்துதற்பொருட் டென்க. பலன்- போலி. கலுழன் - கருடனென்ற வடசொல்லின் விகாரம். குஞ்சு - இளமைப்பெயர்; மதலாய் - மதலையென்பதன் விளி. 25-ஆம் |