செய்யுளில்'விளைவெலாம் வெங்கனல் கொளுத்தி' என வந்ததனால், 'கவர்ந்தனர்' என்றது, 'உயிர்கவர்ந்தனர்' என்றவிடத்துப் போல ஒழித்தன ரென்றவாறாம். (186) 28.-சுதேஷ்ணை மகளிரைநகர்ப்புறங் காவல்செய்யச் சொல்லுதல். என்றபோதிலப்புதல்வனைப்பரிவுடனீன்றாள் நின்றமங்கையர்தங்களைநிரைநிரைநோக்கிச் சென்றகாவலன்வருந்துணைசெங்கையிற்படைகொண்டு ஒன்றவேகிநம்மெயிற்புறங் காமினென்றுரைத்தாள். |
(இ -ள்.) என்ற போதில் - என்று (இடையர்) சொன்னபொழுது, - அ புதல்வனை பரிவுடன் ஈன்றாள் - அவ்வுத்தரகுமாரனை அன்போடு பெற்று வளர்த்த (விராடன்மனைவியாகிய) சுதேஷ்ணையானவள்,-நிரை நிரை நின்ற மங்கையர் தங்களை நோக்கி - வரிசைவரிசையாகத் (தனது அருகில்) நின்ற பரிசனப்பெண்களைப்பார்த்து, 'சென்ற காவலன் வரும் துணை - (நிரை மீட்டற்குத் தெற்குப்பக்கம்) போன (நமது) அரசன் திரும்பி வந்து சேருமளவும், (நீங்கள்), செம் கையில் படைகொண்டு - சிவந்த கைகளிலே ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, ஒன்ற-ஒருசேர [கூட்டமாக], ஏகி - போய், நம் எயில் புறம் காமின் - நமது (நகரத்து) மதிலைச்சுற்றிலும் இருந்து பாதுகாவல்செய்யுங்கள்,' என்று -, உரைத்தாள் - கட்டளையிட்டாள்;(எ - று.) சுதேஷ்ணை வேறுவகையில்லாமையால் மகளிரைக் காக்குமாறு கூறினாள்:அக்காலத்துமகளிரும் வீரமுள்ளவராயிருந்தமை இதனாற் பெறப்படும். (சத்தியபாமை ஸ்ரீக்ருஷ்ணனுக்குத் தேரூர்ந்தமைமுதலியன இங்குக்கருதத்தக்கன.) தந்தைக்கு மூத்தமகனிடத்தும் தாய்க்கு இளையமகனிடத்தும் அன்பு முதிர்ந்திருப்பது இயல்பாதல் தோன்ற, 'அப்புதல்வனைப் பரிவுடனீன்றாள்' என்றார். கை சிவந்திருத்தல், உத்தமவிலக்கணம்: இனி சுதேஷ்ணையின் மெய்க்காவலாகப் படைக்கலம் பிடித்தலாற் சிவந்த கை யெனினுமாம். (187) 29.-இதுவும் அடுத்தகவியும் -குளகம்: உத்தரன் யான்சென்று பொருது பகைவரைவெல்வே னென்றதைத் தெரிவிக்கும். உரைத்தவன்னையைக்கதுமெனவுத்தரன்வணங்கி நரைத்தவோதிநின்றிருமொழி நன்றெனநகையா வரைத்தவாரமுமாரமுமாலையுமணிந்தென் வரைத்தடம்புயம்வளர்த்தது மகளிர்போர்பொரவோ. |
மூன்று கவிகள் - ஒருதொடர். (இ -ள்.) உரைத்த அன்னையை - (இவ்வாறுமகளிரைநோக்கிச்) சொன்ன (தனது) தாயை, உத்தரன்-, கதுமென வணங்கி - விரைவாக நமஸ்கரித்து, 'நரைத்த ஓதி - வெளுத்திருக்கின்ற கூந்தலையுடையவளே! நின் திருமொழி நன்று - நீ இப்பொழுது சொல்லிய மேன்மையுள்ள வார்த்தை நன்றாயிருக்கின்றது!' என - |