வென்றுபோர்முனையரசரைவிடலைவெய்தீண்டுந் துன்றுதாரினாயெனவியந்தின்னவைசொன்னாள். |
(இ - ள்.) என்ற போது-என்று(விரதசாரணியென்ற வண்ண மகள்) சொல்லியபோது, அவன்-அந்த உத்தரகுமாரன், பயந்தவட்கு - (தன்னைப்) பெற்ற தாயினிடம், இயம்பியது உரைப்ப - (வண்ணமகள்) கூறியதைத் தெரிவிக்க,-நிரை வளை - வரிசையாக அமைந்த வளையல்களையணிந்த அந்தச்சுதேட்டிணை,-நின்ற பேடியை - அங்கிருந்த பிருகந்நளையென்னும் பேடியைக் கிட்டி, தழுவி-, 'துன்றுதாரினாய் - நெருங்கிய மாலையை யணிந்தவளே! நீ-, - நேரில் (சாரத்தியஞ்செய்ய) உடன்பட்டாயேயானால், விடலை - (என்) புதல்வன்?,- போர்முனை - போர்க்களத்தில், அரசரை - மாற்றரசரை, வென்று - ஜயித்து, வெய்து ஈண்டும் - விரைவில் மீண்டுவந்திடுவான்,' என - என்று, வியந்து - (அப்பேடியைக்) கொண்டாடி, இன்னவை சொன்னாள் - இவ்வாறான வார்த்தைகளைக் கூறினாள்; (எ - று.)
நிரைவளை - அன்மொழித்தொகை. பயந்தவட்கு - வேற்றுமை மயக்கம். இதனை, செருகுகவியென்பர் ஒருசாரார். (191) 33.-பிருகந்நளைதேர்செலுத்த,உத்தரன் போர்க்குச் செல்லுதல். நாடிவாசியினல்லனநான்கவைபூட்டித் தேடியாயுதஞ்சிலைமுதற்றெரிந்தவைகொண்டு கோடிகோடிபைங்கோதையர்குழீஇயினர்வாழ்த்தப் பேடிதேர்விடச்சென்றனன்சுதேட்டிணைபிள்ளை. |
(இ -ள்.) பேடி - பிருகந்நளை, வாசியில் - குதிரைகளுள்ளே, நல்லன நான்கு அவை - நல்லிலக்கணமமைந்தனவாகிய நான்குகுதிரைகளை, நாடி- தேடி அறிந்து, பூட்டி - நுகத்தடியிற் சேர்த்துக்கட்டி, தேர்விட - தேரைச் செலுத்த,-சுதேட்டிணை பிள்ளை - சுதேஷ்ணையினது புத்திரனாகிய உத்தரனானவன்,-சிலை முதல்-வில் முதலியனவாகிய, ஆயுதம் அவை - ஆயுதங்களை, தேடி தெரிந்து - ஆராய்ந்து அறிந்து, கொண்டு - (நல்லனவாக) எடுத்துக்கொண்டு,-கோடி கோடி பைங்கோதையர் - பசுமையான [கரிய] கூந்தலையுடைய அநேக கோடி மகளிர், குழீஇயினர் வாழ்த்த - திரண்டு வாழ்த்துக் கூற, - சென்றனன்-(போர்க்குப்) புறப்பட்டுப் போனான்; (எ - று.) இதுமுதல் உத்தரதிசை நிரைமீட்சி கூறுகின்றார். 'தேடியாயுதஞ் சிலைமுதல்தெரிந்தவைகொண்டு' என்றதையும் பேடியின் செயலாக உரைக்கலுமாம்.'நான்கவை' 'ஆயுதமவை' என்றவற்றில், 'அவை' - பகுதிப்பொருள் விகுதி.பைங்கோதை - குளிர்ச்சியான கூந்தல்; பசியமாலை யாகவுமாம். 'கூந்தலுக்குப்பசுமையாவது - எண்ணெயிட்டு வாரி மயிர்ச்சாந்து தடவப்பெற்றுஅழகுகுறையாமை' என்பர் ஒருசாரார். (192) |