நட்சத்திரக் கூட்டங்களையும்போல, மண் கொளா விறல் மன் - பூமி முழுவதிலும் அடங்காத வீரத்தன்மையையுடைய துரியோதனராசனையும், உடை வரம்பு இல் வான் படையை - அவனைச் சூழ்ந்துள்ள அளவில்லாத பெரிய சேனையையும், தன் கண் உற கண்டான் - கண்களுக்கெதிரிற் [பிரதியட்சமாக] பார்த்தான்; (எ - று.) தேவாசுரயுத்தம் இராமராவணயுத்தம் போன்ற யுத்தங்களைச் சித்திரத்திலே கண்டு, 'சேனை இங்ஙனமே யிருக்கும்: அதனைத் தான் மிக எளிதில் அழித்துவிடலாம்' என்று கருதிப் போர்க்கு வந்தவனாதலால், உத்தரன் 'எண்கொளா மனத்து இளைஞன்' எனப்பட்டான். கண்கொளாவகை கண்டானென இயைத்து - கண்களின் பார்வை செல்லுமளவுக்கு மேலுஞ் சேனைபரந்து கிடத்தலால், கண்களுக்கு எட்டாதபடியாற் கண்டா னென்றுமாம். 'விண்கொளா' என்னும் அடைமொழியை மீனினத்துக்கும் கூட்டுக. விண்கொளா மதி***மீனினம் - இல்பொருளுவமை. 'மண்கொளாவிறன் மன்' என்பதற்கு - மண்ணுலகத்துள்ளாரில் எவரும் அடையாத வலிமையைத் தான் உடைய மன்ன னென்றுமாம்: பதினாயிரம் யானைபலங் கொண்டவ னாதலால், 'மண் கொளா விறல்மன்' என்றார். 'மண்கொளாவிறல்' என்றது - அதிசயோக்திவகையால் துரியோதனனது வீரத்தைச் சிறப்பித்தது. இனி 'மண்கொளா' என்றதைப் படைக்கு அடைமொழியாக்கிப் பூமிமுழுவதிலும் அடங்காத சேனை யெனினுமாம். ராகவன் என்ற பெயர்க்கு - ரகுமகாராஜனது வமிசத்தில் அவதரித்தவ னென்பது பொருள்: சூரியகுலத்தவனாகிய இவ்வரசன் - திக்குவிசயஞ்செய்து எல்லாத் தேயங்களையும் வென்று 'விசுவஜித்' என்னும் வேள்வியை இயற்றி அதில் தன்செல்வமுழுவதையும் வழங்கிவிட்டு வெறுங்கையனாயிருக்கையில், கௌத்ஸனென்னும் பிராமணன் வந்து தன் குருவாகிய வரதந்துமகாமுனிவனுக்குத் தான் குருதட்சிணை கொடுத்தற்பொருட்டு மிக்க பொருள் வேண்டுமென்று இரக்க அப்பொழுது குபேரனிடத்திலிருந்து வேண்டும் பொருள் தானே வரப்பெற்று அந்தக் கௌத்ஸனுக்குக் கொடுத்தான்: இப்படி இவன் மிக்க வீரமுங் கொடையு முடையவனாய்ப் பிரசித்திபெற்றவனாதலால், இவன் மரபிற்பிறந்தவனென்று இராமபிரானைக் குறித்தார்; காளிதாசமகாகவி வடமொழியில் இவன் பெயரால் 'ரகு வம்ஸம்' என ஒரு காவியஞ் செய்திருத்தலைக் கொண்டும், இவ்வரசனது பெருமையை நன்கு உணரலாம். (194) 36.-அதுகண்டமாத்திரத்தில் உத்தரன் நடுநடுங்கி மூர்ச்சித்தல். கைந்நடுங்கவுங்கானடுங்கவுங்கருத்தழிந்து மெய்ந்நடுங்கவுநாப்புலர்ந்துயிர்ப்புமேல்விஞ்சிச் சொன்னடுங்கவுஞ்சுடர்முடிநடுங்கவுஞ்சோர்ந்தான் மைந்நெடுங்களிற்றுரனுடைவிராடர்கோன்மைந்தன். |
|