ரெனவே,ஆண்மக்கள் பரிகசிப்ப ரென்பது கூறாதே அமையும். துணிவு வேறுண்டோ என்றது - மீண்டுபோவது துணிவன் றென்பதைத் தெரிவிக்கும். வெல்லும் ஆற்றல் இலையேனும் முகத்திலும் மார்பிலும் விழுப்புண்பட்டாயினும் மீண்டால் ஊறஞ்சாமை விளங்கு மென்றற்கு, 'புண்படாது மீண்டாலென்சொலார்' எனப்பட்டது. மகளிர் திரிகரணமும் வேறுபட அறியவொண்ணாத நெஞ்சாழமுடையராதலால், அவர்க்கு 'வஞ்ச நெஞ்சுடை' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது; "ஆழாழியென்னவளவுபடா வஞ்ச நெஞ்சப், பாழான மாதர்" என்றார் பின்னோரும். 'வஞ்சியர்' என்ற சொல் - வஞ்ச முடையாராதல்பற்றி அவர்க்கு இப்பெயர் அமைந்ததுபோலு மென்ற கருத்துத் தொனிக்க நிற்கும். 'மறவோய்' என்று விளித்தது, உத்ஸாஹ முண்டாக்குதற் பொருட்டு. (196) 38. | நிலையுமுட்டியுநிலைபெறநின்றுநேர்படத்திண் சிலைவளைத்துவெஞ்சிலீமுகஞ் சிற்சிலதொடுத்து மலையிலக்கெனயாரையுமலைந்திடுமலைந்தால் அலைகடற்புவியரசரிலாரெதிர்நிற்பார். |
(இ -ள்.) (நீ),-நிலைஉம் - (போரில்) நிற்கும் நிலைமையும், முட்டி உம்- கையில் ஆயுதங்களைப் பிடிக்குந் தன்மையும், நிலை பெற- உறுதியாயிருக்கும்படி, நின்று - (தைரியத்தோடு) நின்று,-திண் சிலை - வலிய வில்லை, நேர்பட - செவ்வையாக, வளைத்து - வணக்கி நாணேற்றி, சில் சில வெம் சிலீமுகம் தொடுத்து - சிலசில கொடிய அம்புகளை எய்து,- மலை இலக்கு என - மலை ஒப்பென்னும்படி [சிறிதுஞ் சலியாமல்], யாரைஉம் - எவரையும், மலைந்திடு - எதிர்த்துப் போர்செய்; மலைந்தால் - (இவ்வாறு) பொருதால், அலை கடல் புவி அரசரில் - அலைகின்ற கடலாற் சூழப்பட்ட பூமியிலுள்ள அரசர்களுள், எதிர் நிற்பார் - (உன்) எதிரில் நிற்க வல்லவர், ஆர் - யாவருளர்? - (எ - று.) எல்லாரும் புறங்கொடுத்துப் போவரென்பதாம். இதனால், அருச்சுனன் சிறிது தேறிய உத்தரனுக்குத் தைரியத்தை யூட்ட முயல்கின்றான். நிலை - போரில் வில்வளைத்து அம்பினை எய்வார்க்கு உரிய நிலை: அது - பைசாசம், மண்டலம், ஆலீடம், பிரதியாலீடம் என நான்கு வகைப்படும்: அவற்றுள், ஒருகால் நிலைநின்று ஒரு காலை முடக்கல் - பைசாசநிலை; இருகாலும் பக்கல்வளைய மண்டலித்தல் - மண்டலநிலை; வலக்கால் மண்டலித்து இடக்கால் முந்துறல் - ஆலீடநிலை; வலக்கால் முந்துற்று இடக்கால் மண்டலித்தல் - பிரதியாலீடநிலை. முட்டி = முஷ்டி: கைப்பிடி. நேர்படத் தொடுத்து என்று இயைத்து - பகைவர்க்கு எதிராக அம்புதொடுத்து என்றலும் அமையும். 'மலையிலக்கென' என்றதற்கு - மலையே (எமது அம்புக்கு ஏற்ற) குறியாவது என்று எண்ணி யெனவும் உரைக்கலாம்; இக்கருத்து, செருக்கினாலாவது. சிலீமுகம் - கூர்மையை முகத்தினுடையதென்று அம்புக்குக் காரணப் பெயர். (197) |