துணித்துமேவலர்முடியுகுசோரிதோய்தொடையுங் கணித்தவெல்லையிற்கொண்டுமீண் டமர்க்களங்கலந்தான். |
(இ -ள்.) (அருச்சுனன்), பிணித்த தேரினை - (அவ்வாறு உத்தரனைச்) சேர்த்துக் கட்டிய இரதத்தை, பெற்றம்உம் பின்பட - (வேகத்திற்சிறந்த) காற்றும் பின்னிடும்படி [காற்றினும் விரைவாக], கடாவி-செலுத்திச் சென்று,-அரும் பெரும் பொதும்பரில் - (பிறர் அறிதற்கு) அரிய பெரிய மரப்பொந்தில், திணித்து சேர்த்திய - (முன்பு) கட்டி மறைத்து வைத்துள்ள, சிலைஉம்-(தனது) வில்லையும், மேவலர் முடி துணித்து - பகைவர்களது தலைகளை அறுத்து, உகு சோரி தோய் - (அவற்றினின்று) பெருகுகின்ற இரத்தந் தோயப்பெற்ற, தொடைஉம் - அம்புகளையும், கணித்த எல்லையின் கொண்டு - நினைத்த மாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, மீண்டு - திரும்பிவந்து, அமர்களம் கலந்தான் - யுத்தஞ்செய்யுமிடத்தைச் சேர்ந்தான்; (எ - று.) 'பொதும்பரிற் சேர்த்திய சிலையும் தொடையும்' என்றது - கீழ்ப்பாண்டவர்கள் அஞ்ஞாதவாசஞ் செய்யச் செல்லும்பொழுது விராடநகர்ப்புறத்து நன்காட்டிற் காளிகோயிலுக்கெதிரிற் பெரியதொரு வன்னிமரத்தின் பொந்திலே தம்தம் ஆயுதங்களையும் கவசங்களையும் பிறவற்றையும் ஒளித்துவைத்து வேறெவரும் அறியாதபடி மந்திரமோதிக் காப்பிட்டு வந்தமையிலென்க. பொதும்பர் - பொதும்பு என்னும் மென்றொடர்க்குற்றியலுகரத்திற்கு அர்-போலி. மேவலர் - விரும்பிச் சேராதவர். சொரிவது - சோரி, இரத்தம். தொடுக்கப்படுவது, தொடையெனக் காரணக்குறி. 'கணித்த எல்லையின்' என்பதற்கு - (முன்பு அஜ்ஞாதவாசத்துக்குக்) குறித்தகாலத்தின் முடிவிலென்று உரைப்பாருமுளர். திணிதரும் என்று எடுத்து - வலியமைந்த என உரைப்பர், ஒருசாரார். (201) 43.-இதுவும், அடுத்தகவியும் - உத்தரனுக்கும் பிருகந்நளைக்கும் நடந்த சம்பாஷணையைத் தெரிவிக்கும். எரிப்புறத்தருத்தருபடையாவெனவினவக் கிரிப்புறப்பெருங்கானுறைகிரீடியவென்னத் தெரிப்புறப்புகலெவ்வயிற்சேர்ந்தனனவனென்று அரிப்புறத்தடங்கண்ணியைக்கேட்டனனவனும். |
(இ -ள்.) 'எரி புறம் - நெருப்பைத் தன்னிடத்தே யுடைய, தரு - வன்னிமரம், தரு - தந்த, படை - ஆயுதங்கள், யா-எவருடையவை?' என வினவ -என்று (உத்தரன்) கேட்க,- 'கிரி - மலைகளிலும், புறம் - அவற்றின் புறத்திலுள்ள, பெருங் கான் - பெரிய காடுகளிலும், உறை - வாசஞ்செய்த, கிரீடிய - அருச்சுனனுடையவை', என்ன - என்று (உருக்கரந்த அருச்சுனன்) சொல்ல,- 'அவன் எ வயின் சேர்ந்தனன் - அவ்வருச்சுனன் எந்த இடத்திற் சென்று சேர்ந்தான்? தெரிப்பு உற புகல் - தெரியும்படி சொல்,' என்று-, அவன் உம் - அவ்வுத்தரனும், அரி புறம் தட கண்ணியை - (சிவந்த) ரேகைகளைத் தம்மிடத்தேயுடைய பெரிய கண்களையுடையளான பேடியை, கேட்டனன் - வினவினான்; (எ - று.) |