வல்லன்என்று முதனூலிற் பேர் கூறப்பட்டுள்ளது. வீமன்வணங்கியது தருமனையேயென்பார் 'தம்முன் மலரடி முன்னிவணங்கி' என்றார். (15) 16.-அவ்வீமனையும் விராடராசன் வெகுமதிசெய்து தன்னிடத்துக்கொள்ளல். என்றபோதவனைவிராடனுமகிழ்வுற்றிருகையுஞ்சென்னிமேலிருத்திப் பொன்றிகழ்மணிப்பூண்மென்றுகில்பலவும்புரவிபோதகங்களும்வழங்கி இன்றுதொட்டெமக்குமெய்ப்பெருஞ்சுற்றத்தொருவனீயென்றடு தொழிற்கு நின்றவரெவர்க்குந்தலைவனாமுரிமைநிலைபெறவழங்கினன்மாதோ. |
(இ -ள்.) என்ற போது - என்று (வீமசேனன்) சொன்னபோது, அவனை - அந்தப்பலாயனனென்றவீமனை, விராடன்உம் - விராடராசனும், மகிழ்வுஉற்று - மகிழ்ச்சிபொருந்தி, இரு கைஉம் - (தன்) இரண்டுகைகளையும், சென்னிமேல்இருத்தி - (அந்தவீமசேனனுடைய) சிரசின்மேலிருக்க வைத்து.- பொன் திகழ் மணி பூண் (பலஉம்) - பொன்னினாலும் இரத்தினங்களினாலும் விளங்குகின்ற ஆபரணங்கள் பலவற்றையும், மெல் துகில் பலஉம் - பலவகைப்பட்ட மெல்லிய ஆடைகளையும், புரவி போதகங்கள்உம் - குதிரைகளையும் யானைக்கன்றுகளையும், வழங்கி - கொடுத்து,- 'இனறு தொட்டு - இன்றுமுதல், எமக்கு-, நீ-, மெய் பெருஞ் சுற்றத்து ஒருவன் - உண்மையான பெருஞ் சுற்றத்தாரி லொருத்தனாவாய்', என்று - என்று (முகமன்) கூறி,-அடு தொழிற்கு நின்றவர் எவர்க்குஉம் - (தன்னிடத்துச்) சமையல்தொழிலில் அமர்ந்து நிற்பவரெல்லார்க்கும், தலைவன் ஆம் - தலைவனாகின்ற, உரிமை - உத்தியோக முறைமையையும், நிலைபெற - நிலையாக, வழங்கினன் - (அந்தப் பலாயனனுக்குக்) கொடுத்தான்; (எ - று.) பலவும்என்பது பூண்என்பதனோடும் கூட்டப்பட்டது. இருகையும் சென்னிமேலிருத்தியது - நீ என்னிடத்து ஒதுங்கிவாழலா மென்பதைக் குறிப்பிக்கும். இனி, தன்தலையின்மேல் தன்இருகைகளையும் வைத்து விராடன் வீமனை அஞ்சலிசெய்தா னென்றல், இந்நிலையில் ஏலாதென்க. போதகம் - யானைக்கன்று: வடசொல். ஒருவன் நீ - முன்னிலையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி. மாதோ - ஈற்றசை. ஐம்பெருஞ்சுற்றத்து என்ற பாடத்துக்கு, ஐம்பெருஞ்சுற்றங்களாவார் - மந்திரியர் புரோகிதர் சேனாபதியர் தூதர் சாரணர்என்ற இவர். (16) 17.-உருப்பசி தந்த சாபத்தால் அருச்சுனன் ஒருவருடம்தாங்கவேண்டிய பேடிவடிவத்தைக் கொள்ளுதல். நீடியசிலைக்கைத்தேவர்கோன்மதலை நிருத்தநல்லரங்கினின்முன் னாள், வாடியமருங்குல்பணைத்தபூண்கொங்கை வாட்டடங்கண்கள் வார்குழைமேல், ஓடியவதனத்துருப்பசிபணியா லுறுவதற்கோரியாண்டமைந்த, பேடியின்வடிவந்தரித்தன னாண்மைக்கிமையவரெவரினும் பெரியோன். |
|