(இ - ள்.) அ சிறுவன்உம் - அந்த உத்தரகுமாரனும், அறிந்து - (அப்பேடியாகிய அருச்சுனன் சொன்னவற்றை யெல்லாந்) தெரிந்து கொண்டு, ஆங்கு- அப்பொழுது, தாள் விழுந்து - (அவனுடைய) பாதங்களில் வீழ்ந்து வணங்கி, எழுந்து - எழுந்திருந்து, பின் - பின்பு, அவன் அருளால் - அவ்வருச்சுனனது கட்டளையால், செறிந்த மால் பெரும் சிறப்பை - (அருள்) பொருந்திய திருமாலின் [ஸ்ரீ கிருஷ்ணனின்] மிக்க சிறப்பை [அருச்சுனனுக்குச் சாரத்தியஞ் செய்யுந் தொழிலை], பெற்று - (தான்) அடைந்து,- பிறந்த - வகுக்கப்பட்ட, பல் பல பேர் அணி - பல பல பெரிய வரிசைகளையுடைய, நால்வகை படைஉம்-(ரத கஜ துரக பதாதி என்னும்) நான்குவகைப்பட்ட (துரியோதனாதியர்) சேனைகளும், முரிந்துபோக - அழிந்தோடும்படி, அ தேர் விடு தொழிலினில் - அந்தத்தேரை யோட்டுஞ் செய்கையில், மூண்டான் - முயன்றான்; (எ - று.) உத்தரன் அருச்சுனனுக்குச் சாரதியானானென்ன வேண்டிய விடத்து 'மால் பெருஞ்சிறப்பையச் சிறுவனும் பெற்று' என்றது - பிறிதினவிற்சியணியாம்;சொல்லவேண்டியதை இனிமைபடச் சுற்றுவழியாகச் சொல்லுதல், இதனிலக்கணம். தேவாதிதேவனாகிய தனது பெருமையெல்லாம் அழியமாறிப் பார்த்தனுக்குச் சாரத்தியஞ் செய்து அடியவர்க் கெளியனாயிருக்குந் தன்மையை வெளியிடுதலால், 'செறிந்த மால் பெருஞ்சிறப்பு' என்றார். அன்றியும், சிறந்த வீரருக்குப் பெரும்போரிற் சாரதியாயிருத்தலும் ஒரு சிறப்பாகும்; மேற்பதினேழாம் போர்ச்சருக்கத்தில் 'புகழே பூண்டு, வேந்தராயமர்க்களத்தி லதிசயித்த வீரரானவர்க் கிதுதான் மேம்பாடன்றோ, மாந்தராயெக்கலையும் வல்லார்க்கன்றி வாசி நெடுந்தேரூரவருமோ?' என வருவது காண்க. மால் பெரு - மிகப்பெரிய என ஒரு பொருட்பன்மொழி யென்பாரு முளர். 'சிறுவனும்' என்ற உம்மை - இறந்தது தழுவிய எச்சத்தோடு இழிவு சிறப்பு. 'அறிந்து' என்பதற்கு (இப்பேடி அருச்சுனனே யென்று) உணர்ந்து என்று உரைப்பர் ஒருசாரார். அருள் - அருளோடு இடுங் கட்டளைக்கு இலக்கணை; காரணவாகுபெயர். பற்பல பேரணி பிறிந்த என்று மொழிமாற்றி - பலபல பேரணிகளாகப் பிரிந்த வென்றலு மொன்று; பிரி, முரி என்பனபோலப் பிறி, முறி என்னும் வினைகளும் உள்ளனவாம். 47.-துரோணனாதியர் பேடியைக்குறித்துச்சங்கித்தல். ஓடினானுமித்தேர்விரைந்தூர்பவனென்றும் பேடிநாமுதலையுறும்பெருந்தகையென்றும் நாடினார்பலர்நந்தியாவர்த்தநாண்மாலை சூடினானெடுஞ்சேனையிற்றுரோணனேமுதலோர். |
(இ - ள்.) நாள் நந்தியாவர்த்தம் மாலை சூடினான் - அன்றைக்கு மலர்ந்த [புதிய] நந்தியாவட்டப்பூமாலையைச் சூடிக்கொண்டிருக்கின்றவனான துரியோதனனது, நெடுஞ் சேனையில் - பெரிய சேனையிலே, துரோணன்ஏ முதலோர் பலர் - துரோணாசாரியன் முதலிய (அறிவிற்சிறந்த) பல வீரர்கள், 'ஓடினான்உம்-(முன்னே தேரேறிப்போர்செய்ய |