பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 133

கையில்ஏந்திக்கொண்டு,- (உத்தரனை நோக்கி) 'கோடி அம்புகள் - அநேகம்
பாணங்களை, ஓர் ஒரு தொடையினில் - தொடுக்கும் முறையொவ்வொன்றிலும்,
கோத்து-தொடுத்து, வீடுவிப்பன் - (பகைவர்களைக்) கொன்று (பசுக்களை)
மீட்பேன்; நீ-, அஞ்சிடா - அச்சங்கொள்ளாமல், தேர் விடுக - தேரைச்
செலுத்துவாயாக,' என்றான் - என்று தைரியங் கூறினான்; (எ - று.)

     வன்னிமரத்தினின்று எடுத்துவந்தமை கீழ்க்கூறியதனால், 'அந்த
வெஞ்சாபம்' என்றார்.  வில்லேந்துதல் ஆடவரியல்பு ஆதலால் 'பெண்மையை
ஆண்மையாய்ப் பிறர் கொண்டாடச் சாபங்கையிலாக்கி' எனப்பட்டது.
காண்டவதகன காலத்தில் அருச்சுனனுக்கு அக்கினிபகவான் கொடுத்த வில்,
'காண்டீவம்' என்னும் பெயரினது.  முதலிரண்டடிகளில் -
தன்பேடித்தன்மையைப் பிறர் ஆண்மையாய்க் கொண்டாடும்படி முன்னே
ஊர்வசியாற் கொடுக்கப்பட்டு வந்தடைந்த கொடிய சாபத்தையுந் தொடியணிந்த
கைம்மாத்திரத்தில் [கைவசத்தில்] ஆக்கி யென்ற பொருளும் தோன்றும்.
சாபம் - சபித்தல் வில் என இவ்விருபொருளுடையதாதலை, "சாபமே சபித்தல்
வில்லாம்" என்னும் நிகண்டினாலும் அறிக.  'வீடுவிப்பன்' என்பதற்கு - உயிர்
விடுவிப்பேனென்றும், நிரைவிடுவிப்பேனென்றும் இருபொருளும் கொள்ளப்
பட்டன.  விடுவிப்பனென்பது  முதல் நீண்டு வந்தது: வீடுவிப்பல் என
அல்லீறாகவும் பிரிக்கலாம்.                                     (207)

49.-பிருகந்நளை அம்பெய்து பலஅரசரை அழித்தல்.

என்றபோதவன்றேரினையிமைப்பினிற்செலுத்தச்
சென்றுபோர்முனைச்சிலைவிடுசிலீமுகங்களினாற்
கொன்றபோர்மன்னரீறிலர்குருகுலத்தவராய்
நின்றபோர்முடிமன்னருஞ்சுளித்துளநெளித்தார்.

      (இ -ள்.) என்ற போது - என்று (அருச்சுனன்) சொன்னபொழுதில்,
அவன் - உத்தரன், தேரினை - தேரை, இமைப்பினில் - ஒரு
மாத்திரைப்பொழுதினுள்ளே, செலுத்த - (மிகவிரைவாக) ஓட்ட, போர் முனை -
போர்க்களத்தில், சென்று - போய், சிலை விடு - (அருச்சுனன்) வில்லிற்கோத்து
எய்த, சிலீமுகங்களினால் - அம்புகளினால், கொன்ற - கொல்லப்பட்ட, போர்
மன்னர் - போரிற்சிறந்த அரசர்கள், ஈறு இலர் - எல்லையில்லாதவர்கள்
[மிகப்பலர்]; (அதுநோக்கி),-குருகுலத்தவர் ஆய் நின்ற - குருகுலத்தில்
தோன்றியவர்களாய்ப் (போர் முகத்தில்) நின்ற, போர் முடி மன்னர்உம் -
போர்த்தொழிலில் வல்ல கிரீடாதிபதியான (பீஷ்மன் விதுரன் துரியோதனன்
முதலிய) அரசர்களும், சுளித்து - கோபித்து, உளம் நெளித்தார் - மனம்
பதைத்தார்கள்; (எ - று.)

     மன்னர் உளம் நெளிந்தார் - அஃறிணைச்சினைப்பெயர் உயர்திணை
முதலின் முடிபையே பெற்ற திணைவழுவமைதி; [நன். பொது - 26.]
இமைப்பினிற் கொன்ற என்று இயைத்தலுமாம்.                     (208)