யானையைக்காட்டிலும் வலிமையுடையது," என்று-, இ நிலத்தினில் - இவ்வுலகத்துச் சொல்லப்படுகின்ற, பழமொழி - பழமொழியை, நீ -, அறிதி - அறிவாய்; (ஆகையால்), எ நிலத்தின்உம்-(தன்நிலம்) அயல்நிலம் என்னும்) எந்த இடங்களிலும், உனக்கு-, எளிது ஆயின்உம் - (போர்செய்வது) எளிதாயிருந்தாலும், இவர் நம் நல் நிலத்தினில் வர - இவர்கள் நமது நல்ல இடத்தில் வந்தபின்பு, அமர் தொடங்குதல் - (நாம்) போரைத் தொடங்குதல், நன்று - நல்லது; (எ - று.) - ஆல் - ஈற்றசை. 'தன்நிலமானால் முயலும் யானையைவெல்லும்' என்றல், உலக வழக்கு. இது, இவர் வலியிலராயினும் நீ மிக்கவலியுடையையாயினும் இவர் நிலத்திலிருந்து நீ போர்செய்தால் தோல்வியடைவாயென்னும் பொருள் தோன்றக் கூறியது. "நெடும்புனலுள் வெல்லு முதலை அடும் புனலி, னீங்கினதனைப் பிற" என்பர், இடனறிதலில் திருவள்ளுவரும். பழமொழி - பழமையாகிய மொழி: உலகநடையை ஒட்டி உயர்ந்தோரால் உண்டாக்கப்பட்டு வழங்குகின்ற கட்டுரை வாக்கியம். 'இனிமேல், அருச்சுனாதியரை வெல்ல முடியாதோ?' என்று துரியோதனனுக்குத் தோன்றக்கூடிய எண்ணத்திற்குச் சாமாதானங்கூறுகின்றானென்க. இப்போது பொருதவர் ஒருகால் பாண்டவராக இருப்பின் பிறகு எப்படியும் அவர்கள் நம்நிலத்தில் வந்து பொருவராதலால், அப்போது அவர்களை வென்றுவிடலாமென்பான் 'இவர் நம்நிலத்தினில் வர அமர்தொடங்குதல் நன்று' என்றான். துரியோதனனுக்கு ஊக்கம் குறையாதிருத்தற்பொருட்டும், அவனுக்குக் கோபமுண்டாகாமலிருப்பதைக் கருதியும், 'எந்நிலத்தினு முனக்கு எளிது' என்றான். தந்தீ - தந்தங்களையுடையது. ஆயினும், உம் - உயர்வுசிறப்பு. குறுமுயல் - பண்புத்தொகை. (210) 52.-அதனை வீடுமனும் துரோணனும்,அங்கீகரிக்க, துரியோதனன் கோபித்தல். என்றுகூறினன்விதுரனு மேனையங்கருகு நின்றவீடுமன்றுரோணனு நினைவிதுவென்றார் அன்றுநாகவெங்கொடியவன் கொடியநெஞ்சழன்றான் குன்றமாயினுநீறெழு மருகுறக்குறுகின். | (இ - ள்.) என்று-, விதுரனும்-, கூறினன் - சொன்னான்; ஏனை - மற்றும், அங்கு - அவ்விடத்தில், அருகு நின்ற - சமீபத்திலிருந்த, வீடுமன் துரோணனும் - பீஷ்மனும் துரோணாசாரியனும், இது நினைவு என்றார் - இது (இச்சமயத்துக்கு ஏற்ற) எண்ணமேயென்று சொன்னார்கள்; (அது கேட்டு), அன்று - அப்பொழுது, நாகம் வெம் கொடியவன் - கொடியபாம்புக்கொடியை யுடையவனான துரியோதனன், கொடிய நெஞ்சு அழன்றான் - கொடுந்தன்மையையுடைய மனம் கொதித்தான்;(அப்பொழுது), அருகுஉற - (அத்துரியோதனனது) சமீபத்தில், குறுகின் - நெருங்கினால், குன்றம் ஆயின்உம் - மலையேயானாலும், நீறு எழும்-பொடியாய்விடுமன்றோ; |