பூர்ணகர்ப்பம். வாலெடுத்துத்துள்ளிக் குதித்தோடுதல் - கொண்டாட்டமிகுதி பற்றி; இது-பசுக்களின் இயல்பு. இச்செய்யுள் - பசுக்களின் தன்மையை வருணித்ததனால், தன்மைநவிற்சியணி. (216) 58.-சாபம்நீங்க, அருச்சுனன்தனது தேரினையும் அநுமத்துவசத்தையும் பெறுதல். கடிகைநாலவண்சென்றபின்கடைசிவந்தகன்ற நெடியகண்ணியன்றிட்டவெஞ்சாபமுநீங்கக் கொடியின்மீதெழுமனுமனைக்குறிக்கவக்கொடியும் முடிகொடன்றனியிரதமுமுன்வரக்கண்டான். |
(இ - ள்.) (அருச்சுனன்),-கடிகை நால் அவண் சென்ற பின்-(அஜ்ஞாத வாசவருஷத்தின் கடைசி) நான்குநாழிகைப்பொழுதும் அவ்வண்ணம் கழிந்தபின்பு.- கடை சிவந்து அகன்ற நெடிய கண்ணி - கடைப்பக்கஞ் செந்நிறமாய்ப் பரந்து நீண்ட கண்களையுடையவளான ஊர்வசி, அன்று - அந்நாளில் [முன்புதான் தேவலோகத்துக்குச் சென்றிருந்தபொழுது], இட்ட - (தனக்குக்) கொடுத்த, வெம் சாபம்உம் - கொடிய (பேடிவடிவம் பெறக் காரணமான) சாபமும், நீங்க - நீங்கியவளவில்,-கொடியின்மீது எழும் - (தனது) துவசத்தின்மேல் எழுந்தருள்கிற, அனுமனை - அநுமானை, குறிக்க - தியானிக்க,-(அதனால் அப்பொழுதே), அ கொடிஉம் - அவ்வநுமத்துவசமும், முடி கொள் தன்தனி இரதம்உம் - சிகரத்தைக்கொண்ட தனது ஒப்பில்லாத தேரும், முன்வர-(தனது) எதிரில் வர, கண்டான் - பார்த்தான்; (எ - று.) அக்கினிதேவனளித்த தேரையும் அநுமக் கொடியையும் அருச்சுனன் எதிரில் வரப்பெற்றா னென்றபடி. குறித்தல்-மனத்தில் நினைத்தல். அவண்=அவ்வண்ணம்: ராஜபரிவாரங்களைத் துரத்திப்பொருது நிரைமீட்டதி லென்றபடி. கடைசிவத்தல் - நல்லிலக்கணமாகிய சிலசிவந்த இரேகைகளைக் கடையிடத்துப்பெறல். குரங்குக்கொடியும், நான்கு வெள்ளைக்குதிரைகள் பூட்டிய தேரும், காண்டீவமென்னும் வில்லும், அட்சயதூணீரமும் - காண்டவதகனகாலத்து அக்கினிதேவனால் அருச்சுனனுக்கு அளிக்கப்பட்டவை. பின்பு வீமசேனன் புஷ்பயாத்திரையாக அளகாபுரிக்குச் சென்றபொழுது இடைவழியிற் கதலிவனத்திலே தவஞ்செய்துகொண்டிருந்தவனும், வாயுகுமாரனாதலால் தனக்குத் தமையனுமான அநுமானைக்கண்டு வணங்கி வேண்டிப் போர்க்களத்தில் அருச்சுனனது தேர்த்துவசத்தில் வந்து நின்று மகிழ்ந்து கூத்தாடும்படி வரம்பெற்றதனால், 'கொடியின் மீதெழு மனுமன்' என்றார். அநுமந் - ஹநுமாந் என்ற வடசொல்லின் விகாரம்; (குழந்தைப்பருவத்திலே இளஞ்சூரியனைக் கனிந்த பழமென்று கருதிப் பிடிக்கப் பாய்ந்தபொழுது அதனையறிந்து சினந்து இந்திரனால் வச்சிராயுதங்கொண்டு அடிக்கப்பட்டுச் சிதைந்த) கன்னமுடையனாதலால், இப்பெயர் வாய்த்தது; கன்னத்தில் விசேஷமுடையவ னென்க; ஹநு - கன்னம், மாந்-வடமொழிப் |