அநுமான்மேலெழுவான்போல் ஆடியது சீதாபிராட்டியை இலங்கையில் தேடுமாறு அநுமான் முன்பு மகேந்திரமலையினின்று மேலெழஆடியது போலுமென்க: தற்குறிப்பேற்றவணி. உண்மைக்கு உலாவினன் என்று இயைத்து - முன்பு வீமனுக்குத் தான் வரங்கொடுத்த வாய்மை தவறாதபடி உலாவின னென்றலு மொன்று. வெண்டிரை - பண்புத்தொகை அன்மொழித்தொகை; வெண்குடை, வெண்சாமரை, வெண்புரவி முதலியன சேனையில் நெருங்கியிருத்தல்பற்றி 'சேனை வெண்டிரை' என்றன ரென்னலாம். திரைவது திரை: திரைதல் - சுருங்கிமடிதல். உம்மை - இராமாயணகதையைச் சுட்டுவதால்; இறந்ததுதழுவிய எச்சப்பொருளது; அக்கதைவருமாறு:-சீதையைத் தேடுதற்பொருட்டு இராமபிரானால் தென்திசைகுறித்து அனுப்பப்பட்ட அங்கதன் முதலிய வாநரவீரர்கள் அச்சீதாபிராட்டி தென்கடலிடையேயுள்ள இலங்கைத் தீவிலிருக்கின்றன ளென்று சம்பாதிசொல்லால் அறிந்தபின்னர் நூறு யோசனைதூரமுள்ள அக்கடலைக் கடக்கும் ஆற்றலிலராய் வருந்துகையில், ஜாம்பவனால் தூண்டப்பட்ட அநுமான் மகேந்திரகிரியின் மேலேறிப் பெருவடிவங்கொண்டு தாவி அக்கடலை எளிதிற்கடந்து இலங்கைசேர்ந்தன னென்பதாம். (220) 62.-அருச்சுனனதுவில்லின்நாணொலியாற் பகைவர் அஞ்சுதல். மருமிகுந்தொடைத்தடம்புயமகபதிமதலை பெருமிதம்படவளைத்தவிற்பிறங்குநாணொலியாற் செருமியெங்கணுங்கரிபரிதேர்மிசைநின்றோர் உருமின்வெங்குரல்கேட்டகோளுரகரோடொத்தார். |
(இ -ள்.) மரு மிகும் தொடை - நறுமணம்மிக்க (போர்க்குரியதும்பைப்பூ)மாலையைத் தரித்த, தட புயம் - பெரிய தோள்களையுடைய, மகபதி மதலை -தேவேந்திரகுமாரனாகிய அருச்சுனன், பெருமிதம் பட - (தனது) வீரத்தன்மைதோன்றும்படி, வளைத்த - வணக்கிய, வில் - வில்லிலே ஏற்றிய, பிறங்கும்நாண் - விளங்குகின்ற நாணின் [நாணியைக் கைவிரலால் தெறித்ததனாலுண்டான], ஒலியால் - ஓசையால், எங்கண்உம் - எல்லாவிடத்தும்[அவனைச்சுற்றிலும்], செருமி - நெருக்கி, கரி பரி தேர் மிசை நின்றோர் -யானை குதிரை இரதங்களின்மேல் ஏறிநின்றவர்களான வீரர்கள், - உருமின்வெம் குரல் கேட்ட - இடியினது கொடிய ஓசையைச் செவியுற்ற, கோள்உரகரோடு - வலிமையையுடைய நாகசாதியாரோடு, ஒத்தார் -ஒத்தவரானார்கள்; (எ - று.)
இடியொலி கேட்டமாத்திரத்தில் நாகர் அஞ்சி அழிவது போல, அருச்சுனனது வின்னாணொலியைக் கேட்ட அளவில் பகைவர் அஞ்சின ரென்றபடி; இடியோசைக்கு அஞ்சிப் பாம்புகள் ஒடுங்குதல் இயல்பு; "விரிநிறநாகம் விடருள தேனு, முருகின் கடுங்சினஞ்சேணின்று முட்கும்" என்ற நாலடியாரையுங் காண்க. மக பதி - யாகங்களுக்குத் தலைவன்; நூறு அசுவமேதயாகஞ் செய்து தேவேந் |