திரபதவிபெறுதலால், இப்பெயர் வந்ததென்க. பெரு மிதம் - எல்லோரோடும் ஒப்ப நில்லாது பேரெல்லையாக நிற்றல்; எனவே, வீரமாயிற்று. கரி - கரமுடையது: வடசொல்; கரம் - துதிக்கை. உரகம் - மார்பினால் ஊர்வது; வடசொல்: உரம் - மார்பு. கோள் - உயிரைக் கொள்ளுந் தன்மையாகவுமாம். 'உரகரோடொத்தார்' என்ற இடத்து, மூன்றனுருபு - ஒப்புப்பொருளில் வந்தது. இங்கு 'மருமிகுந் தொடை' என்றது - தேவலோகத்துக் கற்பக விருக்ஷங்களின் திவ்விய புஷ்பங்களா லாகிய மாலையுமாம். (291) 63.-பலவகையொலிகேட்டு அஞ்சி உத்தரன் பாகுதொழிலையும் மறந்துமூர்ச்சித்தல். குறித்தசங்கொலிசிங்கநாதத்தொலிகுனிவில் தெறித்தநாணொலிசெவிப்படச் சிந்தனைகலங்கிப் பொறித்தபாவையினுத்தரன்பொறிமயக்குற்று மறித்தும்வீழ்ந்தனன்மாவிடுதொழிலையும்மறந்தே. |
(இ -ள்.) குறித்த சங்கு ஒலி - (அருச்சுனன்) ஊதித்தொனி செய்த (தேவதத்தமென்னுஞ்) சங்கத்தின் நாதமும், சிங்கநாதத்து ஒலி - (அவன்) சிங்கநாதஞ் செய்த ஓசையும், குனி வில் தெறித்த நாண் ஒலி - (அவன்) வளைத்த வில்லில் உறுதியாகப்பூட்டிய நாணின் ஓசையும், செவி பட - (தன்) காதுகளிற் பட்ட [கேட்ட] மாத்திரத்தில், உத்தரன்-, சிந்தனை கலங்கி - மனங்கலங்கி, பொறி மயக்கு உற்று - அறிவு மயக்கமடைந்து, மாவிடு தொழிலைஉம் மறந்து - குதிரையோட்டுஞ் செயலையும் மறந்து விட்டு, பொறித்த பாவையின் - சித்திரத்திலெழுதிய பிரதிமைபோல(ச் செயலற்று), மறித்தும் - மறுபடியும், வீழ்ந்தனன் - (தேரில்) விழுந்தான் [மூர்ச்சித்தான்]. 'மறித்தும்' என்றது, கீழ் முப்பத்தாறாங்கவியில் 'சோர்ந்தான்' என வந்ததை நோக்கி. முன்புபகைவர் சேனையைக்கண்டு மூர்ச்சித்தமைபோல இப்பொழுது அருச்சுனன் செய்த நாதங்களைக் கேட்டு மூர்ச்சித்தன னென்க. 'தொழிலையும்' என்ற உம்மையும் - முன்போர்த்தொழிலை மறந்ததல்லாமல் இப்பொழுது தேர்த்தொழிலையும் மறந்தானென்னும் கருத்தைத் தருதலால், இறந்தது தழுவிய எச்சப்பொருளதே; அதனோடு இழிவுசிறப்புமாம். இங்குச் சங்கு கூறியதனால் கீழ் அருச்சுனன் வன்னிமரத்தினின்றும் வில்லையும் அம்பையும் எடுத்து வந்த பொழுது தேவதத்தமென்னும் தனது சங்கையும் உடனெடுத்து வந்தன னென்க. மனமும் புத்தியும் அந்தக்கரணங்களில் வெவ்வே றாதலால், 'சிந்தனை கலங்கி' என்றும், 'பொறிமயக்குற்று' என்றும் தனித்தனிக் கூறினார். பொறிமயக்குற்று - பஞ்சேந்திரியங்களும் தம்தம் உணர்ச்சி ஒழிந்து என்றுமாம். ஸிம்ஹநாதம் - வீராவேசத்தாற் சிங்கத்தின் கர்ச்சனைபோல ஆரவாரிப்பது. பாவை - செயலற்றிருக்கையால், உத்தரனுக்குத் தொழிலுவமை. (222) |