பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 149

நெருங்கிற்றென்க.  பாம்பைப்பிடித்து விடாதபடி உறுதியாகக் கொண்டு வருத்தி
யழித்தல், குரங்கினியல்பு.  உரவுஎனினும், உரமெனினும் ஒக்கும்.  மேரு -
பொன்மலை; இது, பூலோகத்தின் பகுப்புக்களாகிய ஏழுத்வீபங்களுள்
நடுவிலுள்ளதான ஜம்பூதவீபத்தின் நடுவிலே யிருக்கின்றது.  மேரு
எவ்விடத்திலுள்ள தென்றால், நமக்கு வடதிசையிலுள்ள தென வேண்டுதலின்,
அதனை வடமேருவெனக்கூறினார்.  மேருவைக் கொடுமுடி யொடித்து -
இரண்டு செயப்படுபொருள்கள் வந்த வினை.  'நின்தாதையை' என்றது,
சர்ப்பங்களுக்கெல்லாம் ஆதிசேஷன் தலைவனாதல்பற்றி.  பரிவுஇல்நின்னை
என்று எடுத்து - (நல்லோர்பக்கல்) அன்பில்லாத உன்னை யென்றலுமாம்;
'பரிவு' என்ற ஒருசொல்தானே துன்பத்தையும் அன்பையும் உணர்த்துதலை
"பரிவென்ப துன்ப மின்பம் பகருமன்பிற்கு மப்பேர்" என்ற சூடாமணி
நிகண்டினாலும் அறிக.

      மேருவைக் கொடுமுடியொடித்தகதை:- முன்னொருகாலத்தில் வாயு
தேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் தமக்குள் யார் பலசாலியென்று
விவாதமுண்டாக, அதனைப் பரீக்ஷித்தறிதற்பொருட்டு வாயுதேவன்
மேருமலையின் சிகரத்தைப் பெயர்த்துத்தள்ளுவதென்றும் ஆதிசேஷன்
அதுபெயரவொட்டாமற் காத்துக்கொள்வ தென்றும் கோட்பாடுண்டாகி,
அங்ஙனமே இருவரும் தேவர் முதலியோரது முன்னிலையில் தம்தம்
வலிமையைக் காட்டத்தொடங்கிய பொழுது, ஆதிசேஷன் தனது பெரிய
உடம்பினால் மேருவை வளைந்து தனது ஆயிரந்தலைகளாலும் மேருமலையின்
ஆயிரஞ்சிகரங்களையும் கவிந்து கொண்டு பெயரவொட்டாமல் வெகுநேரங்
காக்க, பின்பு வாயுதேவன் தன்வலிமையால் அம்மலைச் சிகரங்களில் மூன்றைப்
பெயர்த்துக் கொண்டுபோய்த் தென்திசையில் தள்ளிவிட்டன னென்பதாம். (225)

67.- அருச்சுனன் பொருதுபலவீரரை யழித்தல்.

வட்டமாகவில்வளைத்தெதிர்மண்டலநிலையாய்த்
தொட்டவாளியானடிமுதன்முடியுறத்துணிப்புண்டு
இட்டமாமணிக்கவசமும்பிளந்தெதிர்ந்துள்ளார்
பட்டொழிந்தனரொழிந்தவர்யாவர்புண்படாதார்.

      (இ -ள்.) (அப்பொழுது அருச்சுனன்), எதிர் - (பகைவர்க்கு) எதிரில்,
மண்டலம் நிலை ஆய் - (விற்றொடுத்து அம்பினையெய்வார்க்கு உரிய)
மண்டலமென்னும் நிலையில் நின்று, வட்டம் ஆக - வட்டவடிவமாக, வில்
வளைத்து - வில்லை வணக்கி, தொட்ட - பிரயோகித்த, வாளியான் -
அம்புகளினால், அடி முதல் முடி உற - கால்முதல் தலை வரையிலும்,
துணிப்புண்டு - அறுக்கப்பட்டவர்களாகியும்,- இட்ட மா மணி கவசம்உம் -
(உடம்பின்மேற் பாதுகாப்பாக) அணிந்த பெரிய ரத்தினங்களிழைத்துச்
செய்யப்பட்ட கவசமும், பிளந்து - பிளக்கப்பட்டவர்களாகியும்,-எதிர்ந்து
உள்ளார் - எதிரிட்டுள்ள பகை வீரர்கள், பட்டு ஒழிந்தனர் -
இறந்துபோனார்கள்; ஒழிந்தவர் - (அவ்வாறு) இறவாமல் நின்றவர்களுள், புண்
படாதார் யாவர் - விரணமடையாதவர் எவர்? (எ - று.)