ஏகு கின்றபே ரிராசராசனையெதிர் தகைந்து கோகு தட்டிடு தனஞ்சயனிவையிவை கூறும். |
(இ -ள்.) மாகு சூழஉம் - வலையானது (தன்னைச்) சூழ்ந்து கொள்ளவும், தப்பிய - (அதினின்று) தப்பியோடப்பார்க்கிற, வரி நிறம் மா போல் - (உடம்பிற்) கோடுகளையும் (பலவகை) நிறங்களையுமுடைய புலிபோன்று, பாகுஉம் வாசிஉம் அமைந்தது ஓர் தேர்மிசை பாய்ந்து ஏகுகின்ற - சாரதியும் குதிரைகளும் நன்றாய்ப்பொருந்தப்பெற்றதாகிய வேறொரு தேரின்மேற் குதித்தேறித் தப்பியோடப் பார்க்கின்ற, பேர் இராச ராசனை - பெரிய அரசர்கட்கு அரசனாகிய துரியோதனனை, எதிர் தகைந்து - (அங்ஙனம் எந்தப்பக்கத்திலும் தப்பிப்போகவொட்டாமல் வளைந்துகொண்டு) எதிரே தடுத்து, கோகுதட்டிடு - (தன்) தோள்களைக் கொட்டி யாரவாரஞ்செய்கின்ற, தனஞ்சயன் - அருச்சுனன், இவை இவை - இந்த இந்த வார்த்தைகளை, கூறும் - சொல்வான்; (எ - று.)-அவற்றை, அடுத்த ஐந்து கவிகளிற் காண்க. உவமையணி. தன்காடு புறங்காடு என்னும் வேற்றுமையின்றி எங்கும் ஒரு நிகராகக் கொடுமைசெய்து திரியும் புலியை உவமை கூறியதனால், துரியோதனன் வேற்றரசர்க்குப்போலவே தனது தாயாதிகளான பாண்டவர்க்குந் தீங்குபுரியு மியல்பின னென்பது தோன்றும். மாகு - வலையிற் கட்டியமணி: அது ஆகுபெயரால் வலையைக் காட்டுமென்பர். தநஞ்ஜயன் - வடசொல்; தருமபுத்திரன் இராசசூயயாகஞ் செய்ய முயன்ற பொழுதில், வடக்கிற்சென்று பல அரசர்களைச் சயித்து அவர்கள் செல்வத்தைத் திறைகொணர்ந்ததனால், அருச்சுனனுக்குவந்த பெயர்; இனி, வெற்றியைச் செல்வமாகவுடையவ னென்றும் பொருள் கொள்ளலாம்: இப்பெயர், அவனது பல பராக்கிரமங்களை விளக்கும். 'ராஜராஜன்' என்பது, துரியோதனனுக்கு ஒருபெயர்; வடசொல். இங்கே 'பேரிராசராசன்' என்றது, இகழ்ச்சி. தோள் தட்டுதல் - வீரக்குறிப்பு. இவையிவை - அடுக்கு, பன்மைப்பொருளது. வரிநிறம்மா - புலிக்கு 'சித்ரகாயம்' என்று ஒருபெயர் வடமொழியில் வழங்கும். (228) வேறு. 70.-இதுமுதல் ஐந்துகவிகள் -அருச்சுனன் துரியோதனனை இகழ்வன. கார்முகங் கைத்தலத் திருப்பக்கைம்மிகு போர்முகந் தன்னினீபுறந்தந் தேகினால் ஊர்முகக் களிற்றின்மேலுலாவும் வீதியின் வார்முகக் கனதன மாதரென்சொலார். |
(இ -ள்.) கார்முகம் - வில், கைத்தலத்து - (உன்) கையிலே, இருப்ப - துணிபடாதிருக்கவும், நீ -, கை மிகு போர் முகந்தன்னில் - கைகலத்தற்கு [பொருதற்கு] இடமான யுத்தகளத்தில், புறம் தந்து |