ஏகினால் -முதுகு காட்டியோடினால்,- ஊர் முகம் - ஊர்கோலமாக, களிற்றின் மேல் - யானைமேலேறி, உலாவும் - (நீ) பவனிவருகின்ற, வீதியின்- தெருக்களிலே, வார்முகம் கன தனம் மாதர் - கச்சைமேலே தரித்த பருத்தகொங்கைகளையுடைய மகளிர், என் சொலார் - என்ன சொல்லமாட்டார்கள்? (எ - று.) நீஊர்க்குச்சென்று யானைமேல் வீதிகளிற் பவனிபோகும்பொழுது கோலங்காண வருகின்ற மகளிர் உன் வீரமின்மையைப் பற்றி மிகவும் நிந்தனை சொல்வரே! என்றவாறு. உனது ஆண்மை மகளிரும் இகழும்படி யானதே யென்று இகழ்ந்தபடி. ஆகவே, புறந்தந்தேகாமல் நின்று போர் செய்வாயாக என்பது, குறிப்பெச்சம். ஆயுதமின்றிப் போர்செய்தல் அரியதாதலாற் கைவில்லும் அற்று ஓடினால் அவ்வளவாக் குற்றமில்லை யென்பான், 'கார்முகங் கைத்தலத் திருப்பப் புறந்தந்தேகினால்' என்றான். இனி, ஊர்முகம் வீதியின்- ஊரிலுள்ள வீதியிலென்றும், ஊர்முகம்களிறு - ஏறிச் செலுத்தப்படுந் தன்மையையுடைய களிறு என்றும் ஆம். இச்செய்யுளை, கீழ்ப்போந்த 37- ஆஞ் செய்யுளின் பின்னிரண்டடிகளோடு ஒப்பிடுக. போரிற் புறங்காட்டுதல், தோல்விக்குறி. இதுமுதற் பதினேழு கவிகள் - பெரும்பாலும் மூன்றாஞ் சீரொன்று மாச்சீரும், மற்றை மூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி நான்குகொண்ட கலிவிருத்தங்கள். (229) 71. | இருபுறஞ்சாமரமிரட்டத்திங்கள்போல் ஒருகுடைநிழற்றவிவ்வுலகநின்னதா மருவலர்கைதொழவாழுகின்றநீ பொருமுனைகாண்டலும்போதல்போதுமோ. |
(இ -ள்.) இரு புறம் - இரண்டு பக்கங்களிலும், சாமரம் இரட்ட - சாரமரங்கள் வீசவும், திங்கள் போல் - பூரணசந்திரன்போல, ஒரு குடை - ஒப்பற்ற வெண்கொற்றக்குடை, நிழற்ற - நிழலைச் செய்யவும், இ உலகம் - இந்த நிலவுலகமுழுவதும், நின்னது ஆ - உன் வசத்ததாக, மருவலர் கைதொழ - பகைவர்கள் கைகூப்பிவணங்கும்படி, வாழுகின்ற - அரசாண்டு வீற்றிருக் கின்ற, நீ -, பொரு முனை காண்டலும் - போர்செய்யுமிடத்தைப் பார்த்தமாத்திரத்திலே, போதல் - புறங்கொடுத்துஓடுதல், போதும்ஓ-தகுமோ? (எ - று.) 'பொருமுனை காண்டலும் போதல் போதுமோ' என்றது-சிறிது நேரம் போர்செய்தாயினும் போகலாகாதோ? போர்க்களத்தைக் கண்டமாத்திரத்தில் இவ்வாறுமீண்டுபோவது, அரசர்க்கரசனாகிய உனக்குப் பேரவமானந்தருவ தொன்றன்றோ என்றபடி. சாமரம் - சமரமென்னும் மானினதுவாலின் வெண்மயிரினாற் செய்யப்பட்டதோர் இராசசின்னம். குடைக்குத் திங்கள் - வெண்மையாலும், வட்டவடிவாலும், தண்ணொளி பரப்புதலாலும் உவமை. (230) 72. | உன்பெருந்துணைவரோடுன்னையோர்கணத்து என்பெருங்கணைகளுக்கிரைகளாக்குவேன் |
|