வன்பெருங்கொடிமிசை மடங்கலேற்றினான் தன்பெருவஞ்சினந்தப்புமேகொலாம். |
(இ -ள்.) உன் பெருந் துணைவரோடு - உன்னுடைய பெரிய தம்பி மார்களையும், உன்னை - உன்னையும், ஓர் கணத்து - ஒருக்ஷணகாலத்திற்குள், என் பெருங் கணைகளுக்கு - எனது பெரிய அம்புகளுக்கு, இரைகள் ஆக்குவேன் - உணவாகச் செய்துவிடுவேன்; (அங்ஙனஞ்செய்வேனாயின்), வல் பெருங் கொடிமிசை மடங்கல் ஏற்றினான் தன்-வலிய பெரிய கொடியில் ஆண்சிங்கத்தினது வடிவத்தை யேற்றியவனான வீமசேனனது, பெரு வஞ்சினம் - பெரிய சபதம், தப்பும் கொல் ஆம் - தவறிப்போகுமே! (எ - று.)- 'ஆதலால் அதுசெய்திலேன்' என்றது, குறிப்பெச்சம். உங்களை இப்பொழுது யான் கொல்லாமல் விடுதற்குக் காரணம் வீமன் சபதந் தப்பினவ னாவனே யென்கின்ற எண்ணமொன்றேயன்றி வேறன்று என்றான். 'பெருந் துணைவர்' என்றது - தொண்ணூற்றொன்பதின்மரென எண்ணிற் பெரிய தம்பிய ரென்றற்கு. துரியோதனன் சகுனியைக்கொண்டு தருமபுத்திரனைச் சூதில் வென்று பாண்டவரை அடிமைப்படுத்தியபின்பு திரௌபதியைத் துச்சாதனனைக் கொண்டு மயிர்பிடித்திழுத்துச் சபையிற் கொணர்ந்து துகிலுரிந்தும் என் மடியின்மே லுட்கா ரென்று சொல்லியும் பங்கப்படுத்தியபொழுது, அதுகண்டு பொறாது வீமசேனன் 'துரியோதனாதியர் நூற்றுவரையும் நானே கொல்வேன்' என்று பிரதிஜ்ஞை செய்துள்ளான். பெருங்கணைகள் - பாசுபதம் முதலியன. 'உன்னை என் கணைகளுக்கு இரைகளாக்குவேன்' என்றது - அம்புகளை எய்து உன்னை அழித்துவிடுவே னென்றபடி; மரபுவழுவமைதி: "உண்டற்குரிய வல்லாப்பொருளை, உண்டனபோலக் கூறலுமரபே' என்பது, தொல்காப்பியம். (231) 73. | எங்களைக்கானில்விட்டிரவியேகவெள் திங்களைப்போனெடுந் திகிரியோச்சினீர் சங்களைபயில்வளநாடன்றண்டினால் உங்களைக்களப்பலியூட்டுநாளையே. |
(இ -ள்.) (நீங்கள்), - எங்களை கானில் விட்டு - எங்களைக் காட்டிற்குப்போகும்படி அனுப்பிவிட்டு, இரவி ஏக-சூரியன் மறைந்து போக, (அந்தச்சமயத்திலே), வெள் திங்களைப் போல் - வெண்ணிறமான சந்திரன் ஒளிவீசி விளங்குவது போல, நெடுந்திகிரி ஓச்சினீர் - பெரிய ஆஜ்ஞாசக்கரத்தை (உலகமுழுவதுஞ்) செலுத்தி வாழ்ந்து விளங்கினீர்கள்; உங்களை - (இவ்வாறு துரோகிகளாகிய) உங்களை, நாளைஏ - நாளைக்கே [வெகுவிரைவிலே யென்றபடி], சங்கு அளை பயில் வளம் நாடன் - சங்குகள் சேற்றில் ஊர்கின்ற நீர் வளப்பத்தையுடைய குருநாட்டுக்கு உரியவனாகிய வீமன், தண்டினால் - (தனது சத்துருகாதினியென்னுங்) கதாயுதத்தால், களம் பலி ஊட்டும் - போர்க்களத்திற்கொன்று பலியிடுவான்; |