பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 157

வந்து போர் இரக்கும் அ கன்னன்மேல் இரதம் ஏவினான் - எதிரில் வந்து
யுத்தத்தை வேண்டுகின்ற அந்தக்கர்ணனைக் குறித்துத் (தனது) தேரைச்
செலுத்தினான்; (எ-று.)

     ஒருயாளி யானையை எளிதில் அழிக்கவல்லதாயிருந்தும் அதனை
அலட்சியத்தால் விட்டு ஒருபுலியின்மேற் பாய்ந்தாற்போல, அருச்சுனன்
துரியோதனனை எளிதிற் கொல்லவல்லனாயிருந்தும் அதுசெய்யாது
இகழ்ந்துவிட்டுக் கர்ணனைநோக்கிப் போர்க்குச் சென்றன னென்பதாம்.
யானை - துரியோதனனுக்கும், புலி - கர்ணனுக்கும், யாளி - அருச்சுனனுக்கும்
உவமை. விற்போரில் துரியோதனனினும் கர்ணன் சிறந்தவனென்பது
இவ்வுவமையில் தொனிக்கு மெனக் கொள்வர் ஒருசாரார். யாளி-துதிக்கையை
யுடையதும் யானையைக்கொல்வதும் சிங்கம்போல்வது மாகிய தொரு மிருக
விசேடம்; இது, யாளியானை யெனவும் படும்: இச்சொல் சிங்கமென்ற
பொருளில் வழங்குதலு முண்டு.

     போரிரத்தல்-'நீ என்னுடன் போர்செய்ய வா' என்று அழைத்தல்,
யாவர்க்கும் கேட்டவற்றையெல்லாங் கொடுக்கின்ற வள்ளலாகிய கர்ணன்
அருச்சுனனிடம் வந்து போரையிரந்தன னென ஒருவகைச்சமத்காரம்
அமையக் கவி கூறினார். கொடு வரி - ஒரு சொல்: வளைவான
உடற்கோடுகளையுடையதென்ற காரணப்பொருள் பற்றிப் புலியைக் குறிக்கும்;
பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை, கொடுமை - வளைவு.
'அருச்சுனன் கர்ணன் மேல் இரதம்ஏவினான்' என்றதை, உத்தரனுக்குக்
கட்டளையிட்டு அவனைக்கொண்டு செலுத்தின னென்க.           (236)

78.-கர்ணன் அருச்சுனன் என்ற இருவரும் கைகலத்தல்.

இரதமுமிரதமு மெதிர்ந்தபோதிரு
குரதுரகதங்களுங் குமுறியார்த்தன
உரைதருபாகரு முடன்றுகூவினார்
விரைதனுவளைத்தனர் வீரர்தாமுமே.

     (இ-ள்.) இரதம்உம் இரதமும் எதிர்ந்தபோது - (அருச்சுனனது)
தேரும் (கர்ணனது) தேரும் ஒன்றையொன்று எதிரிற்சமீபித்து
நெருங்கியபொழுது, -இரு குரம் துரகதங்கள்உம்-இரண்டுதேரிலும் பூட்டிய
(வலிய) குளம்புகளையுடைய குதிரைகளும், குமுறி ஆர்த்தன-கனைத்து
ஆரவாரித்தன; உரைதரு பாகர்உம்-சிறப்பித்துச்சொல்லப்படுகின்ற
இரண்டுதேர்ச்சாரதிகளும், உடன்று கூவினார்-பெருங்கோபங்கொண்டு
ஆரவாரித்தார்கள்; வீரர்தாம்உம்-இரண்டு வீரர்களும் (கர்ணனும்
அருச்சுனனும்), விரை தனு வளைத்தனர் - விரைவாக வில்லைவளைத்தார்கள்;
(எ-று.)

     இரு துரகதம் - இரண்டுபக்கத்துக் குதிரைகள். குர துரகதம்-(ஒற்றைக்)
குளம்புகளினால் விரைந்துசெல்வதான குதிரை. விரை-விரைந்து:
வினையெச்சவிகாரம்; (போர்செய்தலில்) விரைவுகொண்ட, வில் என்றால்,
வினைத்தொகையாம்.                                      (237)