79.-இருவரும் நெடும்பொழுதுசமமாகப் பொருதல். இருவருமெதிரெதிரேவும்வாளியால் வெருவருமிருளுறவிசும்புதூர்த்தனர் பொருவருமமர்நெடும்போதுதாக்கியும் ஒருவருமிளைத்திலரொத்தவாண்மையார். |
(இ -ள்.) ஒத்த ஆண்மையார் - சரிசமமான ஆண்மையையுடையரான, இருவர்உம் - (கர்ணன் அர்ச்சுனன் என்ற இந்த) இரண்டுபேரும், எதிர் எதிர் ஏவும் - எதிர்க்கெதிரே [தம்மில் ஒருவரைக்குறித்து ஒருவர்] செலுத்திய, வாளியால் - அம்புகளினால்,- வெருவரும் இருள் உற - அஞ்சத்தக்க இருள் உண்டாக, விசும்புதூர்த்தனர் - ஆகாயத்தை மறைத்தனர்; (இவ்வாறு), பொருவு அரும் அமர் - ஒப்பில்லாத யுத்தத்தை, நெடும் போது தாக்கிஉம் - வெகுநேரம் உக்கிரமாகச்செய்தும், ஒருவர்உம் இளைத்திலர் - (இவ்விருவரில்) ஒருவராயினும் சிறிதும் வலிகுறைந்தன ரில்லை; (எ - று.) நிரைநிரையாகத்தொடுத்த மிகப்பலவாகிய அம்புகள் அடர்ந்து சூரியனை மறைத்தலால் இருள் உண்டாயிற் றென்க. (238) 80.-கர்ணன் தேர்முதலியனஅழிந்து ஓடுதல். மற்றொருதொடையினிற்சுவேதவாகனன் முற்றொருகணத்திடைமூன்றுகோல்விட இற்றொருகணத்திடையிவுளிபாகுதேர் அற்றொருவினனடலாண்மையங்கர்கோன். |
(இ -ள்.) (இங்ஙனம் பொருகையில்), சுவேத வாகனன் - வெண்ணிறமானகுதிரைகளையுடையவனாகிய அருச்சுனன், மற்று - பின்பு, ஒரு தொடையினில்- ஒரு பிரயோகத்தில், முற்று ஒரு கணத்திடை - ஒரு க்ஷணகாலம்முடிவதற்குள்ளே, மூன்று கோல் விட - மூன்று அம்புகளை ஒருசேரத்தொடுக்க, (அவற்றால்)-இற்று ஒரு கணத்திடை - இத்தன்மைத்தான அந்த க்ஷணமொன்றிலே, அடல் ஆண்மை அங்கர் கோன் - வலிமையையும் வீரத்தன்மையையுமுடைய அங்கதேசத்தார்க்கரசனான கர்ணன், இவுளி பாகு தேர் அற்று - குதிரைகளும் சாரதியும் தேரும் அழிந்து, ஒருவினன் - (போரினின்று) நீங்கிச்சென்றான்; (எ - று.) அங்கர்கோன் இவுளிபாகுதேர் அற்று ஒருவினன் - சினைவினை, முதல்வினைகொண்டது. வெண்ணிறக் குதிரைகள் அக்கினியீந்தவையென்று முன்னரே கூறப்பட்டன. மற்று - இடைச்சொல். ஒரு தொடை - தொடுக்குந்தரமொன்று. முற்று கணம் - வினைத்தொகை. கணம் - ஒருகால நுட்பம். மதனது அங்கம் [சரீரம்] விழுந்த இடம், அக்காரணத்தால் அங்கதேசமென்று பெயர்பெற்றது. (239) |