81.-கர்ணன் மீண்டும் மீண்டும்வந்து பொருது தோற்றோடுதல். ஒருவியிட்டோடிமற்றோரொர்தேர்மிசை மருவியிட்டெதிருறவந்துமோதியும் உருவியிட்டனகணையொன்றுபோற்பல வெருவியிட்டனனவன்மீளமீளவே. |
(இ -ள்.) அவன் - அந்தக்கர்ணன்,- ஒருவியிட்டு ஓடி - (போர்) நீங்கி ஓடிப்போய், மற்று ஓர் ஒர் தேர்மிசை - வேறு ஒவ்வொரு தேரின்மேல், மருவியிட்டு - சேர்ந்து [ஏறி], எதிர் உற வந்து மோதிஉம் - (அருச்சுனனுக்கு) எதிராக வந்து போர்செய்தும், ஒன்று போல் பல கணை உருவியிட்டன - ஓர் அம்புபோலவே (அருச்சுனனது) பல அம்புகளும் (ஒருதொடையாகத் தனது உடம்பில்) தைத்துப் புதைந்தோடினவாக, மீள மீள - மறுபடியும் மறுபடியும், வெருவியிட்டனன் - அஞ்சிப்போயினான்; (எ - று.) கர்ணன் போரினின்று நீங்கியோடி வேறொரு தேரின்மேலேறி மீண்டு அருச்சுனனெதிரில்வந்து பொருவதும், அருச்சுனனம்புகள் பல தனது உடலில் தைக்கப்பெற்றவனாய் அஞ்சித்தோற்றோடுவதுமாகப் பலமுறை நிகழ்ந்த தென்க. 'மீள மீள' என்ற அடுக்கு பன்மைப்பொருளது. (240) 82.-பலமுறை தேற்றோடியகர்ணனை நோக்கி அசுவத்தாமன் சில பரிகாசச்சொற்களைக் கூறத் தொடங்குதல். இம்முறைவந்துவந்தெதிர்ந்துவெஞ்சமர் மும்முறைமுறிதலுமுனிவன்மாமகன் அம்முறைமுதுகிடுமருக்கன்மைந்தனைத் தெம்முறைமையிற்சிலவார்த்தைசெப்புவான். |
(இ -ள்.) (கர்ணன்), இ முறை - இவ்வாறு, வெம் சமர் - கொடிய போரில், வந்து வந்து-, எதிர்ந்து - எதிர்த்து, மும் முறை முறிதலும் - மூன்றுதரம் தோற்றுப்போனவளவில்,-முனிவன் மாமகன் - துரோணாசாரியனது சிறந்த குமாரனாகிய அசுவத்தாமன், அ முறை முதுகு இடும் அருக்கன் மைந்தனை - அவ்வாறு முதுகு காட்டித் தோற்றோடுகின்ற சூரியகுமாரனாகிய அக்கர்ணனை (நோக்கி), தெவ் முறைமையின் சில வார்த்தை செப்புவான் - பகைத்தன்மையையுடைய சிலவார்த்தைகளைச் சொல்பவனானான்; (எ - று.) - அவற்றை, அடுத்த இரண்டுகவிகளிற் கூறுகின்றார். துரோணன் மனைவியாகிய கிருபியின் வடிவழகைக் கேள்வியுற்றும் ஒருகால்கண்டும் மிகக்காமுற்ற சிவபிரானது அருளினாற் குதிரையினிடமாகப்பிறந்தவன் இவன்; துரோணனாலும், கிருபியினாலும் வளர்க்கப்பட்டவன்; ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவன். (241) |