83.-இதுவும், அடுத்தகவியும் -அசுவத்தாமனது இகழ்ச்சிவார்த்தை. தேருமொன்றொருவனேதேரிலாளுமிங்கு யாருமஞ்சுதிரெனவிகழ்ந்துரைத்தநீ போருடைந்தோடுதல்போதுமோநறுந் தாருடன்பொலிதருதாமமார்பனே. |
(இ -ள்.) நறுந் தாருடன் பொலிதரு - வாசனைவீசுகின்ற பூமாலையுடனேவிளங்குகின்ற, தாமம் மார்பனே - இரத்தினவாரத்தைத் தரித்த மார்பையுடையவனே! 'தேர்உம் ஒன்று - (எதிர்ப்பக்கத்தில்) தேரும் ஒன்றுதான்: தேரில் ஆள்உம் - அத்தேரிலேறிப்போர்க்குவந்தவனும், ஒருவன்ஏ - ஒருத்தன்தான்; (இங்ஙனமிருக்கவும்), இங்கு யார்உம் அஞ்சுதிர் - இங்கு எல்லாரும் அச்சமடைகின்றீர்களே!' என - என்று, இகழ்ந்து உரைத்த - (எங்களையெல்லாம்) அவமதித்துப்பேசின, நீ-, போர்உடைந்து ஓடுதல் - (அந்த ஒருவனோடுசெய்யும்) போரில் தோற்று முன்நிற்கமாட்டாமல் ஓடிப்போவது, போதும்ஓ - தகுமோ? (எ - று.) மற்றயாவரையும் இகழ்ந்து பேசிவந்த நீயே இவ்வாறு ஓடினால் யாவரும் உன்னை இகழாரோ? என்றபடி. 'யார்' என்ற சொல் - இருதிணையைம்பால் மூவிடத்துக்கும் பொதுவாக வழங்குதலால், 'யாருமஞ்சுதிர்' என்ற முடிபை இடவழுவமைதியென்னாது வழாநிலையாகவே கொள்ளலாம். இகழ்ந்துரைத்தது - கீழ் 53 - ஆஞ்செய்யுளிற் காண்க. 'நறுந்தார்' எனவே, பூமாலையாயிற்று; இங்கு, வெட்சிப்பூமாலை யெனவுமாம். நினது மார்பு போரில் எதிர்த்து நிற்றற்குஅன்றி அலங்காரத்திற்கே அமைந்ததுபோலு மென்ற கருத்துத் தொனிக்குமாறு 'நறுந்தாருடன் பொலிதரு தாமமார்பனே' என்று விளித்தான். (242) 84. | சொல்லலாமிருந்துழிச்சொன்னசொற்படி வெல்லலாமென்பதுவிதிக்குங்கூடுமோ மல்லலாளியைப்பலவளைந்துகொள்ளினும் கொல்லலாயிருக்குமோகுஞ்சரங்களால். |
(இ -ள்.) இருந்தஉழி - இருந்த இடத்திலே (இருந்துகொண்டு), சொல்லல்ஆம் - (எவ்வளவு செய்தற்கரியகாரியத்தையும் செய்து முடிப்பேனென்றுஎளிதில் வாயாற்) சொல்லுதல் (யாவர்க்கும்) எளியதாம்; சொன்ன சொல்படி -(தான்) சொல்லிய அச்சொல்லின்படியே, வெல்லல் ஆம் என்பது -(பகைவரைப் போரில்) ஜயித்து விடலா மென்பது, விதிக்குஉம் - தெய்வத்துக்கும், கூடும்ஓ - நிச்சயமாகக் கைகூடுவதொருகாரியமோ? [அன்று]; (அன்றியும்), மல்லல் ஆளியை - வலிமைமிகுதியுடைய சிங்கத்தை, பல வளைந்து கொள்ளின்உம் - பலயானைகள் ஒன்றாகத்திரண்டு சூழ்ந்துகொண்டாலும், குஞ்சரங்களால் - அந்த யானைகளால், கொல்லல் ஆய் இருக்கும்ஓ - கொல்லும்படியாயிருக்குமோ? [இராதே]; (எ - று.) |