அந்தண ரரசே யுன்றனருளினா லடவி நீங்கி வந்தன மென்றுசிற்சில் வாசக மியம்பு வானே. |
(இ -ள்.) தேர் உந்து முனியை - (அவ்வாறு தன்மேல்) இரதத்தைச் செலுத்திவந்த துரோணாசாரியனை, அந்த உதிட்டிரன் இளவல் - தருமபுத்திரனது தம்பியாகிய அந்த அருச்சுனன், நோக்கி - பார்த்து, சிந்தையில் அன்பு கூர - மனத்திற் குருபக்தி மிகாநிற்க, சே அடி பணிந்து - (அவ்வாசிரியனது) சிவந்த பாதங்களைக்குறித்து வணங்கி, போற்றி - துதித்து, 'அந்தணர் அரசே - பிராமணச் சிரேஷ்டனே! (நாங்கள்), உன்தன் அருளினால் - உனது அநுக்கிரகத்தால், அடவி நீங்கி வந்தனம் - காட்டில் வாசஞ்செய்ய வேண்டிய காலங்களைக்கழித்து மீண்டுவந்தோம்,' என்று - என்றுசொல்லி, சில் சில் வாசகம் இயம்புவான் - (மற்றுஞ்) சிலசிலவார்த்தைகளைச் சொல்பவனானான்; (எ - று.)-அவற்றை அடுத்த இரண்டுகவிகளிற்கூறுகின்றார். உதிட்டிரன் - யுதிஷ்டிரன் என்ற வடசொல்லின் விகாரம்: போரிற் சலியாது உறுதியாய் நிற்பவ னென்பது பொருள். இளவல் - இளையவன்: அருச்சுனனை 'உதிட்டிரனிளவல்' என்றது, தரும சிந்தையை யுடையவனென்றற்கு; போரிற் பின்வாங்காதவ னென்பதும் இதில் தோன்றும். இதுமுதல் ஐம்பத்தொருகவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள். (246) 88.-இதுவும், அடுத்தசெய்யுளும்- ஒருதொடர்: அர்ச்சுனனது பணிவுமொழி. யாதுமொன்றறியாவென்னையிவனலாதிலையென்றிந்த மேதினிமதிக்குமாறுவின்முதற்படைகள்யாவும் தீதறத்தந்தவுண்மைத்தெய்வநீயென்றாற்பஞ்ச பாதகந்தன்னிலொன்றுன்பதயுகம்பிழைப்பதையா. |
(இ -ள்.) 'ஐயா-சுவாமி! யாது ஒன்றுஉம் அறியா என்னை - யாதொரு கல்வியையும் அறிந்திராத என்னை, இவன் அலாது இலை என்று இந்த மேதினி மதிக்கும் ஆறு - இவ்வருச்சுனனேயல்லாமல் (இவ்வுலகத்து வில்லின்திறம் முதலியவற்றில் வேறெவரும் வல்லவர்) இல்லை' என்று இந்நிலவுலகத்திலுள்ள வரெல்லாரும் நன்குமதித்துக்கொண்டாடும்படி, வில் முதல் படைகள் யாஉம் - வில் முதலிய ஆயுதங்களின் தொழில்களெல்லாவற்றையும், தீது அற தந்த - சிறிதுந்தீங்கில்லாமல் (எனக்கு) உபதேசித்தருளிய, உண்மை தெய்வம் - சத்தியமான தெய்வமாகின்றாய், நீ-,' என்றால்-, உன் பதம் யுகம் பிழைப்பது-உனது உபயபாதங்களுக்குப் பிழைசெய்வது, பஞ்சபாதகம் தன்னில் ஒன்று - ஐந்துமகாபாபங்களில் ஒன்றாகுமன்றோ! (எ - று.) |