பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 165

வடிவையெழுதிய துவசத்துக்கு இங்கு ஆகுபெயராம்.  உருமேறு -
பெரியதையும் சிறந்ததையும் 'ஏறு' என்றல், மரபு.

     கிருபன் - கௌதமமுனிவனது பௌத்திரன்; சரத்வாந் என்ற முனிவனது
குமாரன்; துரோணன் மனைவியான கிருபியின் உடன் பிறந்தவன்; ஆதலால்,
துரோணனுக்கு மைத்துனன்;  துரோணன் ஆசிரியனாதற்குமுன்பு
பாண்டவதுரியோதனாதியர்க்கு வில்வித்தை கற்பித்துவந்தன னிவனென
உணர்க.  ஏழுசிரஞ்சீவிகளிலொருவனிவன், நாணற்காட்டிற் பிறந்திருந்த
இவனையும் இவன் தங்கையையும் அங்கு வேட்டையாடவந்த சந்தநுமகாராஜன்
பார்த்துக்கிருபையினா லெடுத்து வளர்த்ததனால், இவர்கட்கு முறையே
கிருபனென்றும் கிருபியென்றும் பெயர்களாயின.  பிறகு ஒருகால் அந்தச்
சரத்வானென்ற முனிவன் அத்தினாபுரிக்கு வந்து தன்மகனான இக்கிருபனுக்கு
வில்வித்தை முழுவதையும் கற்பித்துக்கொடுத்துச் சென்றன னாதலால், கிருபன்
சிறந்த வில்லாசிரியனாய் அங்கு விளங்கினன்.  கௌதமகுலத்தார் ஆதியில்
க்ஷத்திரிய சம்பந்தமுடையராயினமைபற்றி க்ஷத்திரியத்தன்மையோடு கூடிய
பிராமணர்களாயிருந்தார்க ளாதலின், வில்முதலிய படைக்கலங்கட்கு
உரியரானார்.  "இடையிரு வகையோ ரல்லது நாடிற், படைவகை பெறாஅ
ரென்மனார் புலவர்" என்ற தொல்காப்பியத்து மரபியற் சூத்திரத்து 'நாடின்'
என்பதனால், சிறுபான்மை அந்தணரும் படைக்குஉரிய ரென்பது கொண்டவாறு
காண்க; அச்சூத்திரவுரையில் 'அவர் இயமதங்கியாரும் துரோணனும் கிருபனும்
முதலாயினா ரெனக் கொள்க' என்றமையுணர்க.                    (248)

90.-துரோணன்'போர்செய்யவேண்டும்' என்றல்.

அம்முனிதன்னோடிவ்வாறருச்சுனன்புகலவல்விற்
கைம்முனிவனுஞ்செஞ்சோற்றுக்கடன்கழித்திடுதல்வேண்டும்
தெம்முனைமதியாவீராதேவர்தம்பகையைவென்ற
வெம்முனைகாணுமாறுன்வில்வளைத்திடுகவென்றான்.

      (இ -ள்.) இ ஆறு - இவ்விதமாக, அருச்சுனன்-, அ முனி தன்னோடு
புகல - அந்தத் துரோணாசாரியருடனே சொல்ல,- வல் வில் கை முனிவன்உம்
- வலிய வில்லை யேந்திய கையையுடைய அத்துரோணனும்,-
(அருச்சுனனைநோக்கி,) 'தெவ் முனை மதியா வீரா - பகைவர்களுடைய
போரைச் சிறிதும் லக்ஷ்யஞ்செய்யாத மகாவீரனே! செம் சோறு கடன்
கழித்திடுதல் வேண்டும் - (துரியோதனனுக்கு நாங்கள்) செவ்விய
சோற்றுக்கடனைக் கழித்திடவேண்டும்;  (ஆதலால்) தேவர்தம் பகையை
வென்ற வெம் முனை காணும் ஆறு - (இந்திரன் முதலிய) தேவர்கட்குப்
பகைவர்களாகிய நிவாதகவசகாலகேய ரென்னும் அசுரர்களைச் சயித்த (உனது)
உக்கிரமான யுத்த சாமர்த்தியத்தை (நாங்கள்) பார்க்கும்படி, உன் வில்
வளைத்திடுக - உனதுவில்லை வளைத்து (எங்களுடன்) போர்செய்வாயாக,'
என்றான் - என்று கட்டளையிட்டான்; (எ - று.)