95.- அசுவத்தாமன் எதிர்த்து அருச்சுனனது வில்நாணியை அறுத்தல். தந்தைபோரழிந்துபோனசாபலங்கண்டுவெம்பி இந்திரன்மதலையோடுமெதிர்த்தனனிவுளித்தாமா முந்துறவிருவர்வில்லுமுரண்படக்குனித்தபோரின் அந்தணன்கணையான்மன்னன்வில்லினாணற்றதன்றே. |
(இ -ள்.) இவுளித்தாமா - அசுவத்தாமன்,- தந்தை போர் அழிந்து போன சாபலம் கண்டு - (தனது) தந்தையான துரோணன் போரில் தோற்று முதுகிட்டுப் போன நிலையில்லாமையை [நடுக்கத்தை]ப்பார்த்து, வெம்பி - மனம்வெதும்பி, இந்திரன் மதலையோடு உம் எதிர்த்தனன் - தேவேந்திரனது குமாரனாகிய அருச்சுனனுடனே எதிர்த்துப் போர்தொடங்கினான்; இருவர் வில்உம் - இவர்களிரண்டு பேரது விற்களும், முரண் பட - மாறுபாடு உண்டாக, குனித்த - வளைந்துசெய்த, போரின் - யுத்தத்தில், முந்துற - முதலிலே, அந்தணன் கணையால் - பிராமணஜாதியனான அசுவத்தாமனது அம்பினால், மன்னன் வில்லின் நாண் அற்றது - க்ஷத்திரிய ஜாதியனான அருச்சுனனது வில்லின்நாணியானது அறுபட்டது; சாபலம் - சபலத்தன்மை. வெம்புதல் - கொதித்தல்; கோபக்குறி. அசுவம், இவுளி என்பன குதிரையாகிய ஒரு பொருளைக் குறிப்பன வாதலால், அசுவத்தாமாவை 'இவுளித்தாமா' என்றார்; இவ்வாறே பரித்தாமா, புரவித்தாமா, துரகத்தாமா என்றுங் கூறுவர். அசுவத்தாமன் என்ற வடமொழிப்பெயர்க்கு - குதிரையைப் பிறப்பிடமாகவுடையவனென்பது பொருள்; தாமம் - இடம்: குதிரையின் வயிற்றினின்று பிறந்தவன் இவன். வீரரது மாறுபாட்டை அவர் வில்லின்மேலேற்றி, 'இருவர் வில்லு முரண்படக்குனித்தபோர்' எனப்பட்டது; இனி 'இருவரும் முரண்படவில்குனித்த போரின்' என்று எடுத்து இரண்டுபேரும் ஒருவர்க்கொருவர் மாறாகத் தம்தமது வில்லைவளைத்துச்செய்த போரிலென்று உரைத்தலுமாம். இந்த்ரன் - பரமைசுவரியமுடையவ னென்று அவயவப்பொருள்படும். முரண் பட - வலிமை பொருந்த எனினுமாம். அன்றே - ஈற்றசை. (254) 96.-அருச்சுனனெய்தபாசுபதாஸ்திரத்தால் அசுவத்தாமன் தோற்றல். மந்தரமனையதோளான்மற்றொருவரிவில்வாங்கி இந்தவெம்பகழிக்கெல்லாமீடறானிவனென்றெண்ணிச் சந்திரமவுலிதந்தசாயகந்தொடுத்தலோடும் நொந்தினியென்செய்வோமென் றூர்புகநோக்கினானே. |
(இ -ள்.) (உடனே),- மந்தரம் அனைய தோளான் - மந்தரமலை போன்ற தோள்களையுடையவனான அருச்சுனன், - மற்று ஒரு வரி வில் வாங்கி - வேறொரு கட்டமைந்த வில்லை (எடுத்து) வளைத்து, |