அலங்கல்மாலை சுயோதனன் - வண்டுகள் இசைபாடுதற்கிடமான தொங்கியசைகின்ற (நந்தியாவட்டமலர்) மாலையையுடைய துரியோதனனும், சிந்து ராயன் - சிந்து தேசத்தரசனான சயத்திரதனும், (ஆகிய நால்வரும்), துன்னிடு நிருபர் சூழ - (தம்மைச்) சார்ந்துள்ள அரசர்கள் பலர் சூழ்ந்துவர, சூழ் திசை நான்குஉம் வந்து - அருச்சுனனைச் சுற்றிலும் நான்கு திக்குகளிலும் வந்து,- முன்னிடு தேரோன் தன்னை - முன்னே வந்தெதிர்க்கின்ற தேரையுடையவனான அருச்சுனனை, முனை உற வளைந்துகொண்டார் - போரிற் பொருந்தும்படி சூழ்ந்துகொண்டார்கள்; (எ - று.) துரோணன் முதலியோர் தோற்றோடுவதுகண்ட வீடுமன் முதலிய நால்வரும் பல அரசர்கள்சூழ அருச்சுனனை வளைந்து கொண்டன ரென்பதாம். தென் இடுதல் - 'தென்ன தென' என்று ஆளத்திவைத்து இசைபாடுதல். ஸிந்துராஜனென்ற வடமொழித்தொடர், விகாரப்பட்டது: இவன் - விருத்தக்ஷத்திர னென்பவனது புத்திரன்; துரியோதனாதியரது தங்கையான துச்சளையின் கணவன்; சிந்துதேசத்தரசனாதலாற் சைந்தவனெனவும்படுவன்: பாண்டவர் வனவாசஞ்செய்கையில் அங்குச்சென்று அவர்களில்லாதசமயம் பார்த்துத் திரௌபதியை வலிதிற்பற்றிச் செல்பவனாகி அப்பொழுது தொடர்ந்துவந்த வீமார்ச்சுனர்களாற் பரிபவஞ்செய்யப்பட்டவனிவன். முன்னிடுதல் - விரைந்து வருதலும், சிறப்புறுதலுமாம். முனை - போர்க்களத்தில், உற - நன்றாக [சிறிதும்விடாமல்], வளைந்துகொண்டன ரென்றலு மொன்று. (257) 99.-அனைவ ரம்பையும் அருச்சுனன் தடுத்தல். இவர்பெருந்தேரின்மேலோனொருவனேயிலக்கதாகத் தவருடன்குனித்தநேகசாயகந்தொடுத்தகாலைக் கவுரிபங்காளன்றன்னைக்கண்ணுறக்கண்டகாளை பவுரிவந்தொன்றுந்தன்மேற்படாமல்வெம்பகழிகோத்தான். |
(இ -ள்.) இவர் - (வந்துவளைந்துகொண்ட) இவ்வரசர்களெல்லாரும், உடன் - ஒருசேர, தவர் குனித்து - (தம்தமது) வில்லை வளைத்து, பெருந்தேரின் மேலோன் ஒருவன்ஏ இலக்கு அது ஆக - பெரியதேரின் மேலுள்ளவனான அருச்சுனனொருவனையே (தமது அம்புகளுக்குக்) குறியாகக்கொண்டு, அநேக சாயகம் தொடுத்த காலை - பல அம்புகளை மேன்மேலெய்தவளவில்,- கவுரிபங்காளன் தன்னை கண்உற கண்ட காளை - பார்வதியை (த்தனது) இடப்பக்கத்திற்கொண்டருளியவனான பரமசிவனைக் கண்களுக்கெதிரில் [பிரதியக்ஷமாகத்] தரிசித்த இளவீரனான அருச்சுனன், பவுரிவந்து - (தான்) சுழன்றுகொண்டே, ஒன்றுஉம் தன்மேல் படாமல் வெம்பகழி கோத்தான் - (அவர்களெய்த அம்புகளில்) ஒன்றும் தனது உடம்பிற்படாதபடி கொடிய அம்புகளை எதிரேதொடுத்துத்தடுத்தான்; (எ - று.) |