100.-அருச்சுனன் நான்குதிசையிலும் அஸ்திரங்களைப் பிரயோகித்தல். குடதிசைமகவான்வாளிகுணதிசைவருணன்வாளி வடதிசைமறலிவாளிதென்றிசைமதியின்வாளி அடலுறவிமைப்பினேவியவரவர்மார்புந்தோளும் படருறப்படைகணீறுபடப்படப்பரப்பினானே. |
(இ -ள்.) குட திசை - மேற்குத்திக்கில், மகவான் வாளி - இந்திரனைத் தெய்வமாகவுடைய அம்பும் [ஐந்திராஸ்திரமும்], குண திசை - கிழக்குத்திக்கில், வருணன் வாளி - வருணனைத் தெய்வமாகவுடைய அம்பும் [வாருணாஸ்திரமும்], வடதிசை - வடக்குத்திக்கில், மறலி வாளி - யமனைத் தெய்வமாகவுடைய அம்பும் [யமாஸ்திரமும்], தென் திசை - தெற்குத்திக்கில், மதியின் வாளி - குபேரனைத் தெய்வமாகவுடைய அம்பும் [குபேராஸ்திரமும்], (ஆக இவ்வாறு), அடல் உற - மாறுபட, இமைப்பின் ஏவி - ஒருநொடிப்பொழுதிற் பிரயோகித்து, அவர் அவர் மார்புஉம் தோள்உம் படர் உற - அந்தந்த வீரரது மார்பும் தோள்களும் நோவடையும்படியாகவும், படைகள் நீறு படபட - (அவரவரது) ஆயுதங்களெல்லாம் பொடிப்பொடியாய் அழிந்துபோம்படியாகவும், பரப்பினான் - பரப்பச்செய்தான்; (எ - று.)
மகவான்வாளி - இந்திரனுடைய அஸ்திரம்; பிறவும் இங்ஙனமே கொள்க. இந்திரன்முதலிய நால்வரும் முறையே கிழக்குமுதலிய நான்குதிசைகளுக்குங் காவலராவர். அந்தந்தத்திக்குப்பாலகரின் அம்பைஅவரவர்நேரிற் செல்லக்கூடிய எதிர்த்திசையில் தொடுத்தனனென்பது விளங்க, 'அடலுற ஏவி' எனப்பட்டது. குடக்கு + திசை = குடதிசை. நூறு அசுவமேதயாகங்களைச் செய்தவன் இந்திரபதவி பெறுவனாதல் பற்றி, 'மகவாந்' என்று இந்திரனுக்கு ஒருபெயர்; வடசொல்: மகம் - யாகம்: மறல் - கொடுமை, கொலை, அதனைச் செய்பவன் மறலி என யமனுக்குக் காரணக்குறி: ஸோமன், இந்து என்ற வடமொழிகள், சந்திரனுக்கேயன்றிக் குபேரனுக்கும் பரியாயநாமமாக வழங்குதல்பற்றி குபேரனை 'மதி' என்றார்; என்றது, லக்ஷிதலக்ஷணையென்க. [மதி = ஸோமன், இந்து: ஸோமன்=இந்து, குபேரன்.] ஸோமனென்பது குபேரனுக்கு வழங்குதலைப் பலவிடத்துங் காணலாம். (259) 101.-அருச்சுனன் மோகநாஸ்திரந்தொடுத்துப் பகைவர்சேனையை மயங்கிவிழச் செய்தல். கோகனநாகவேகக்கொடியவன்சேனையாவும் மோகனக்கணையொன்றேவிமுடியடிபடிக்கண்வீழ்த்தான் மாகனற்கடவுடந்தமணிப்பொலந்தடந்தேர்வெள்ளை வாகனக்குரிசில்வின்மைவல்லபமிருந்தவாறே. |
(இ -ள்.) (பின்னும் அருச்சுனன்), மோகனம் கணை ஒன்று ஏவி - மயக்கத்தையுண்டாக்கும் அஸ்திரமாகிய மோகனாஸ்திரமொன்றைப் |