பிரயோகித்து,- கோ கனம் - கண்களையே காதுகளாகவுடைய, நாகம் - பாம்பையெழுதிய, வேகம் கொடியவன் - (படபடவென்று) விரைந்தடிக்கின்ற கொடிச்சீலையை யுடையவனான துரியோதனனது, சேனை யாஉம் - சேனைக ளெல்லாவற்றையும், முடி அடி படிக்கண் வீழ்த்தான் - தலைகளும் கால்களும் தாறுமாறாகத் தரையில் மயங்கிவிழும்படி செய்தான்; மா கனல் கடவுள் தந்த - சிறந்த அக்கினிதேவன் (காண்டவதகனகாலத்துக்) கொடுத்தருளிய, தட மணி பொலம் தேர்-பெரிய அழகிய பொன்மயமான தேரையும், வெள்ளை வாகனம் - (நான்கு) வெள்ளைக்குதிரைகளையுமுடைய, குரிசில் - பெருமையிற் சிறந்தவனான அருச்சுனனது, வின்மை வல்லபம் - விற்றொழில் வல்லமை, இருந்த ஆறுஏ - இருந்தவிதம் அதிசயிக்கத் தக்கது! துரியோதனன் சேனைகளையெல்லாம் தானொருவனாகவே பொருந்தி ஒற்றைக்கணையால் மோகிக்கச்செய்த அருச்சுனனது விற்றிறமையை ஈற்றடியாற் கவிபாராட்டிக் கூறுகின்றனர். கனம் - கர்ண மென்பதன் விகாரம். கோகர்ணநாகம் - வடமொழித்தொடர். கண்களையே காதுகளாகவுடையதாய், அதனால் 'கட்செவி' என்றும் பெயர்பெறுதலால், 'கோகனநாகம்' எனப்பட்டது. மணிப்பொலந்தேர் - அடிக்கும் மணிகள்கட்டிய அழகிய தேரென்றுமாம்; பெரிய இரத்தினங்கள் பதித்த பொற்றேரென்றும் உரைப்பர். வாகநம் என்பதற்கு - சுமப்பது என்று பொருள்; குதிரைக்குக் காரணக்குறி. ஈற்றேகாரம், வியப்புத்தோன்ற நின்றது. (260) 102.-அருச்சுனன் பகைவர்களுடைய ஆடைகளைப் பறித்தல். இத்தரையிடங்கொளாமலிறந்தனர்போலவீழ்ந்த மத்தரைமயிர்கொய்தென்னமணிக்கொடித்தூசுந்தூசும் உத்தரைவண்டற்பாவைக்குடுத்துதற்கென்றுகொய்தான் அத்தரைமவுலித்திங்களமுதுகப்புடைத்தவில்லான். |
(இ - ள்.) இ தரை இடம் கொளாமல் - இப்போர்க்களத்தினிடம் முழுவதிலும் அடங்காமல், இறந்தனர்போல வீழ்ந்த-மரணமடைந்தவர்போல விழுந்துகிடக்கின்ற, மத்தரை-மயக்கமடைந்த அவ்வீரர்களையெல்லாம், மயிர் கொய்து என்ன - மொட்டையடித்தாற்போல, மணி கொடி தூசுஉம் - (அவர்களுடைய) அழகிய துவசங்களிற்கட்டிய சீலைகளையும், தூசுஉம் - (அவர்கள் தரித்துள்ள) ஆடைகளையும், உத்தரை வண்டல் பாவைக்கு உடுத்துதற்கு என்று கொய்தான் - உத்தரை வைத்துக்கொண்டு விளையாடுகின்ற பிரதிமைகளுக்கு (அலங்காரமாக)த் தரிப்பதற்கென் றெண்ணிப் பறித்தான்: (யாவனெனில்),- அத்தரை - சிவபெருமானை, மவுலி - சிரசில், திங்கள் அமுது உக புடைத்த - (அங்கு வசிக்கின்ற) பிறைச்சந்திரனிடத்தினின்று அமிருதம் சிந்தும்படி அடித்த, வில்லான் - வில்லின் தண்டத்தையுடையவனான அருச்சுனன்; (எ - று.)
உத்தரை - விராடன்மகள்; உத்தரன் தங்கை. உத்தரனும் பிருகந்நளையும் போர்க்குப் புறப்பட்டபோது, இவள் தனது விளையாட்டுப் |