பற்றியுமாம். சாந்திரமான வருஷமாவது - அமாவாசைக்கமாவாசை ஒருமாச மெனக்கொண்டு கணக்கிட்டுச் சந்திரனுடையசம்பந்தத்தால் ஏற்படுத்தும் வருஷம்; (சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றோரிராசிக்குப்போகுங் காலத்தை ஒருமாசமெனக்கொண்டு முந்நூற்றறுபத்தைந்து நாள் கணக்கிட்டு ஏற்படுத்தும் வருஷம் சௌரமான வருஷமென்றும், முந்நூற்றறுபது நாள் கணக்கிட்டு ஏற்படுத்தும் வருஷம் ஸாவநவருஷமென்றுஞ் சொல்லப்படும்.) பட்சபாதமில்லாமல் உண்மை கூறியமைபற்றி, 'நெஞ்சினிலழுக்கிலாதான்' என்றார்; மனத்துக்குக் குற்றம் - தீயசிந்தனை. பாண்டவர்களை 'இன்னலேயுழந்தோர்' என்று குறித்ததனால், அவர்கள் பக்கல் வீடுமனுக்கு உள்ள இரக்கம் வெளியாம். செந்நெற்பயிர்கள் கரும்புகள்போலவும் கரும்புகள் பாக்குமரங்கள் போலவும் வளரும் நீர்நாடு என, அதிசயோக்திவகையால் நீர்வளச் செழுமையும் நிலவளச்செழுமையுங் கூறியவாறாம்; "கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்ன" எனப் பிறர்கூறுமாறுங் காண்க. 'செந்நெலே', 'கன்னலே' என்ற ஏகாரங்கள் - தேற்றத்தோடு இழிவுசிறப்பு. செந்நெல்-நீர் வளத்து விளைவதொரு நெற்சாதி. கன்னல்காட்டுதல் - கரும்பினுருவைத் தான் கொண்டு காட்டுதல்; கமுகுகாட்டுத லென்பதும் இவ்வாறே; இங்கு 'காட்ட', 'காட்டும்' என்றவை-உவமவாசகமாய் நின்றன. சேர்ந்து - (நெல்வயலை) அடுத்து என்றுமாம். (265) 107.-துரியோதனன் தனது ஊர்க்குச்செல்லுதல். அரவினையுயர்த்தகோமானவ்வுரைகேட்டபோழ்தே பரவையினிரவிகண்டபனிமதிபோலமாழ்கி வரவரவறிதுமென்றுமாபெருஞ்சேனையோடும் இரவிடையாருந்துஞ்சவெயில்வளைநகரிபுக்கான். |
(இ -ள்.) அரவினை உயர்த்த கோமான் - பாம்புக்கொடியை உயர நாட்டிய துரியோதனராசன், அ உரை கேட்ட போழ்துஏ - அந்த வீடுமன் வார்த்தையைக் கேட்டவளவிலே, பரவையின் இரவி கண்ட பனி மதிபோல மாழ்கி - (கீழ்) கடலினின்று உதித்த சூரியனைக் கண்ட குளிர்ந்த சந்திரன்போல ஒளிமழுங்கி [மனந்தளர்ந்து], வர வர அறிதும் என்று - 'போகப்போகப் பார்த்துக்கொள்வோம்' என்று எண்ணி, மா பெருஞ் சேனையோடுஉம் - மிகப்பெரிய சேனையுடனே, இரவிடை யார்உம் துஞ்ச - நடுராத்திரியில் யாவருந் தூங்குகையில், எயில் வளை நகரி புக்கான் - மதில்கள் சூழ்ந்த (தனது) அஸ்திநாபுரியிற் போய்ச்சேர்ந்தான்; (எ - று.) தாம்தோற்று மீள்வதை ஊரவர்கண்டால் இகழ்வரேயென்னும் நாணத்தினால், அவர்கள் விழித்திருக்கின்ற சமயத்திற் செல்லவிரும்பாமல், அவர்களனைவருந் தூங்குகின்ற நள்ளிரவிற்போய்ச் சேர்ந்தன னென்க. இரவிடை - இடையிரவு: இராப் பொழுதின்நடுவில்; பாதிராத்திரியி லென்க: 'எயில்வளைநகரி' |