கொண்டுவிளை புகழ் விராடன் வேந்து அவை அதனை - முதிர்ந்த புகழையுடைய விராடமன்னனுடைய இராசசபையை, வேறு ஒரு நாளையின் - வேறொருதினத்திலே, அடைந்தான் - வந்து சேர்ந்தான்; (எ - று.) க்ருஷ்ணனைச் சகதேவனுக்கு உவமை கூறியதனால், க்ஷத்திரியனானவன் இடைக்கோலத்தைக் கொண்டமையும் விளங்கும். குழையணிந்து - தளிரையணிந்து என்றலும் உண்டு. குதிரையின்வகைகளைப்பற்றி 'மங்காளன் சாரங்கன் கங்காநீலன் மௌவழகன் கொங்காளன் கன்னசம்பான், குங்குமச்சோரன் கரியான்நீலன் சாரன் குலவுமள்ளான் உரஞ்சிவந்தான் நல்லான் பொல்லான், தங்குகருங்காற்சம்பான் என்று கூறுந்தன்மையுள" என்று திருவாதவூரர்புராணத்தும், "உயர்கனவட்டம் போரா னுரனுளான் கொங்கான் கங்கான், மயில்வரி நீலான் பொல்லான் மகிழ்விதை மௌவான்சேயான், நயன வஞ்சனம் பொன் மாரி பாடல நளினி பச்சை பயமிலாமரீசி கோரம் பட்டவர்த்தனங்கள்பாரே" என்று திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணத்திலும், மற்றும் கல்லாடம் முதலியவற்றிலும் கூறியிருப்பது காண்க. (26) 27.-சகதேவன் தான் கொண்டகோலத்திற்குஏற்ப, வினாவிய விராடனுக்குத் தன்னைத்தெரிவித்தல். ஆர்கொனீயென்னவறன்மகனுடனோராசனத்திருந்தபூபதியைச் சீருறவேறோர்விரகினால்வணங்கிச்செப்பினனன்னசாதேவன் பார்கொளநினைந்துசுயோதனன்விடுப்பப்படர்வனம்புகுந்தபாண்டவரில் தார்கொள்வேலிளையோன்றனதுகோபாலன்றந்திரிபாலன்யானென்றான். |
(இ - ள்.) (வந்த அவனை விராடராசன்பார்த்து), 'நீ ஆர் கொல்' என்ன - 'நீ யாவனோ?' என்றுவினாவ,-அன்ன சாதேவன் - அந்தச் சகதேவன், அறன்மகனுடன் ஓர் ஆசனத்து இருந்த பூபதியை - தருமபுத்திரனுடனே ஒரேயாசனத்திலே வீற்றிருந்த அந்தவிராடராசனை, வேறு ஓர் விரகினால் வணங்கி - வேறொருதந்திரத்தினால் வணங்கிவிட்டு, சீர் உற - சிறப்புப்பொருந்த, செப்பினன் - (பின் வருமாறு) கூறினான்: 'சுயோதனன் - துரியோதனன், பார் கொள - (பாண்டவருடைய) இராச்சியத்தைக் கவரும் பொருட்டு, நினைந்து -, விடுப்ப - (காட்டிற்குச்செல்லுமாறு) ஏவியனுப்ப,-படர் வனம் புகுந்த பாண்டவரில் - விசாலமான காட்டிலே சேர்ந்த பாண்டவருக்குள், தார் கொள் வேல் இளையோன் தனது - வெற்றிமாலையையணிந்து வேல்தாங்கிய இளைய தம்பியாகிய சகதேவனுடைய, கோபாலன் - பசுக்களைக் காப்பவன், யான்-: தந்திரிபாலன் - தந்திரிபாலனென்னும் பெயருடையேன்,' என்றான் - என்று விடைகூறினான்; (எ - று.) விராடன் தன்னைவணங்கினானென்று நினையாநிற்கத் தருமனை வணங்கினானென்பார் 'பூபதியைச் சீருற வேறோர்விரகினால் வணங்கி' என்றார். (27) |