பக்கம் எண் :

நாடுகரந்துறை சருக்கம் 21

28.-விராடன் வந்தவனை யுபசரித்துநிரைக்காவல னாக்க,
அவன் கோபாலர்க்கெல்லாந் தலைவனாதல்.

ஆங்கவனிவ்வாறுரைத்தலுமவனையருகுறவருகெனவழைத்துப்,
பாங்குறத்தக்கவழக்கமும்வழங்கிப்பல்வகைநிரைகளுநீயே,
யீங்குமப்படியேபுரத்தியென்றுரைத்தானிவனுமவ்வரசனேவலினாற்,
றீங்கறக்கைக்கொண்டவ்வவர்க்கெல்லாந்தகைபெறுஞ்செம்மலாயினனே.

     (இ -ள்.) ஆங்கு - அப்போது, அவன் - அந்தச்சகதேவன், இ ஆறு
உரைத்தலும் - இப்படிச்சொன்னவுடனே, அவனை-, வருக என - வருவாயாக
என்றுசொல்லி, அருகு உற அழைத்து - சமீபத்திலேபொருந்தக் கூப்பிட்டு,
பாங்கு உற தக்க - இனிமைபொருந்தத்தகுதியான, வழக்கம்உம் -
வரிசைகளையும், வழங்கி-கொடுத்து, (அவனைநோக்கி),-'அப்படி ஏ -
சகதேவனிடத்துப்போலவே, ஈங்கு உம் - இங்கேயும், பல்வகை நிரைகள் உம் -
பலவகைப்பட்ட பசுக்கூட்டங்களையும், நீயே-, புரத்தி-பாதுகாப்பாய்,' என்று-,
உரைத்தான் - (விராடராசன்) சொன்னான்: இவன்உம் - இந்தத் தந்திரிபாலனும்,
அ அரசன் ஏவலினால் - அந்தவிராடராசனுடைய கட்டளையினால், தீங்கு அற
- துன்பமில்லாமல், கைக்கொண்டு - (நிரைகளைத் தன்) வசத்திற்கொண்டு, அ
அவர்க்கு எல்லாம் - ஏற்கவேயிருந்த இடையர்கட்கெல்லாம், தகை பெறும் -
பெருமைபெற்ற, செம்மல் ஆயினன் - தலைவனாயினான்; (எ - று.)

     வழக்கம் - கௌரவமாக வழங்கப்படுவது: வரிசை : செயப்படுபொருள்
விகுதி பெற்ற பெயர்.                                    (28)

வேறு.

29.-திரௌபதி வண்ணமகளாகி, விராடமன்னவனுடைய தேவியின்
கோயிலை நாடி யடைதல்.

ஓமமக வாரழலி னூடுருவுயிர்க்கும்
மாமயிறி ரௌபதியும்வண்ணமக ளாகித்
தேமருவு தார்முடிவி ராடனிருதோள்சேர்
கோமகளை நாடியவள்கோயிலிடை புக்காள்.

 (இ - ள்.) ஓமம் மகம் ஆர் அழலினூடு- ஓமஞ்செய்த யாகத்தின்
நிரம்பிய நெருப்பினிடையிலே, உரு உயிர்க்கும் - உருவங்கொண்டு
வெளிப்பட்ட, மா மயில் - சிறந்த மயில்போன்ற, திரௌபதிஉம்-, வண்ணம்
மகள் ஆகி - மகளிர்க்கு அலங்காரஞ்செய்யும் பணிப்பெண் வடிவுகொண்டு,
தேன் மருவு தார் முடி விராடன் இருதோள் சேர்-தேன் பொருந்திய
மாலைசூடிய முடியையுடைய விராடனுடைய இரண்டுதோளையுஞ் சேர்ந்த,
கோமகளை - இராணியை, நாடி - அடையவிரும்பி, அவள் கோயிலிடை -
அந்தஇராணியின் அரண்மனையிலே, புக்காள் - புகுந்தாள்; (எ - று.)-விராடன்
தேவியின் பெயர் - சுதேஷ்ணை யென்பது.