துயர்உம்எய்தாது - எவ்வகைத்துன்பத்தையும் அடையாமல், எம்நகரி என்ன - எம்முடைய இந்திரப்பிரத்தநகரியிலே யுறைவதுபோல, நெடுநாள் - பலநாள் [ஒருவருஷகாலம்], இனிதுஇருந்தேம் - இனிதாக வசித்துவந்தோம்: நின்னில்உம் உயர்ந்த தமர் - உன்னைக்காட்டிலும் மேம்பட்ட சுற்றத்தார், நீ அறிய-, உண்டுஓ - உளரோ? (எ - று.) நல்லோர்க்கு எந்தப்பொருளிலேனும் ஐயம்தோன்றியவிடத்து அவர் நெஞ்சே சான்று ஆகு மென்ப வாதலால், 'நீயறியவுண்டோ' என்கின்றான். சென்னல்வயலூடு என்றும் பாடம். (311) 12.-உன்னுடையசேனைமுதலியவற்றின் துணையிருப்பின் பகைவெல்வே னென்று தருமன் கூறுதல். நின்புதல்வருந்திறல்வரூதினியுநீயும் என்புயமெனச்சமரிலென்னருகுநின்றால் வன்பினொடுவஞ்சனைசெய்மன்னர்படையாவும் தென்புலமடைந்திடமலைப்பலிதுதிண்ணம். |
(இ -ள்.) நின் புதல்வர்உம் - உன்னுடைய புத்திரரும், திறல் வரூதினி உம் - வலிமையையுடைய சேனையும், நீயும்-, என் புயம் என - என்தோள்போல், சமரில் - (இனி நேரப்போகின்ற) போரிலே, என் அருகு நின்றால் - என்சமீபத்திலே யிருந்தால், வன்பினொடு - வலிமையோடு, வஞ்சனை செய் - வஞ்சனையைச்செய்கின்ற, மன்னர் படை யாஉம் - (துரியோதனராசனைச்சேர்ந்த) மன்னவரின் சேனைகள் யாவும், தென் புலம் அடைந்திட - யமலோகத்தைச் சேரும்படி, மலைப்பல் - போர்செய்வேன்: இது -, திண்ணம்-நிச்சயம்; (எ - று.) புதல்வர்என்றபன்மை - விராடனுடைய முதற்பத்தினியாகிய சுரதையென்பவளிடத்துத்தோன்றிய சிவேதன் சங்கன் என்பவரோடு, இரண்டாம் மனைவியாகிய சுதேஷ்ணையென்பாளிடத்துத் தோன்றிய உத்தரனையுங் குறித்தற்காக. (312) 13.-விராடன் அவ்வுரைகேட்டுமகிழ, உத்தரன் கூறலுறுதல். எனமுரசுயர்த்தவ னியம்புதலுமகிழா மனனிடரகற்றினனம்மச்சவளநாடன் தனயனுநமக்குறுதிதக்கதெனவெண்ணா இனிமையொடறத்தின்மகனுக்கிவையிசைப்பான். |
(இ -ள்.) என - என்று, முரசு உயர்த்தவன் - முரசக்கொடியை உயர வெடுத்தவனாகிய தருமன், இயம்புதலும் - சொன்னவுடனே, அ மச்சம் வளம் நாடன் - அந்த மச்சநாட்டிற்கு உரியவனான விராடன், மகிழா - மனமகிழ்ச்சியடைந்து, மனன் இடர் அகற்றினன் - மனத்துயரத்தைப் போக்கினான்: தனயன்உம் - (அவனுடைய) குமாரனான உத்தரனும், 'தக்கது- (இந்தப்பாண்டவர்க்குத்) தகுதியாக இருப்பது [உதவுவது], நமக்கு உறுதி - நமக்கு நன்மை தருவதாகும்,' என எண்ணா - என்றுநினைத்து, இனிமையொடு - மனமகிழ்ச்சியொடு, |