பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 39

கீசகனும்,நாணம் உற்று ஒடுங்கி நின்ற உயர் தவம் பாவைதன் -
நாணமடைந்து (இவனால் என்ன தீமை விளையுமோ என்ற அச்சத்தினால்)
உடல்குன்றி நின்ற சிறந்த நல்வினையையுடைய அந்தத் திரௌபதியின், இரு
பதங்களில் வீழ்ந்து - இரண்டு கால்களிலே (தன் சிரசுபடும்படி) விழுந்து
கும்பிட்டு, 'நீ எனது ஆவி - நீ என்னுடைய உயிர்போல்வாய்,' என்று -
என்றுசொல்லி, - மீளஉம் - பின்னும், எத்தனை கூறினான் - எத்தனையோ
வார்த்தைகளைச் சொன்னான்; (எ - று.)

     காமப்பித்துக்கொண்டு அந்தக்கீசகன் சொன்னவை அனுவதித்தற்கும்
தகாதன என்ற காரணத்தால், அவற்றை விவரியாமல், 'எத்தனை கூறினான்'
என்று கூறியொழிந்தார். என்று நின்றங்கினியன கூறினான் என்றும் பாடம். (57)

6.-இதுவும் அடுத்த கவியும் -ஒருதொடர்:கீசகனைப் பழித்தும்
    மருட்டியும்திரௌபதிகூறியவற்றைத் தெரிவிக்கும்.

கூறுகின்றமொழிகளுக்குத்தரங்கொடாதுநின்றதொர்கொம்பரின்
                                      வாய்மறைந்து,
ஏறுகின்றபழிகளும்பாவமு மிம்மைதானுமறுமையும்பார்த்திலை,
மாறுகின்றிலைசொல்லத்தகாதபுன் மாற்றமின்னமுமன்னுயிர்
                                      யாவும்வந்து,
ஆறுகின்றகுடைநிழல்வேந்தனுக் கழிவுசெய்தியறிவிலிபோலுநீ.

      (இ -ள்.) கூறுகின்ற - (அந்தக்கீசகன்) சொல்லுகிற, மொழிகளுக்கு -
வார்த்தைகட்கு, உத்தரம் கொடாது - மறுமொழி தராமல், நின்றது ஒர்
கொம்பரின்வாய் மறைந்து - அருகேயிருந்த ஒருமரக்கிளையிலே
மறைந்துகொண்டு, (திரௌபதி அந்தக்கீசகனைநோக்கிப் பின்வருமாறு
கூறலானாள்):'பழிகளும் பாவமும்-, ஏறுகின்ற-(உனக்கு)மிகுகின்றன: இம்மை
தான்உம்-இவ்வுலகத்தில் விளைவதையும், மறுமைஉம் - மறுபிறப்பில்
விளையப்போவதையும், பார்த்திலை-(நீ) ஆலோசித்தாயில்லை: சொல்ல தகாத
புல் மாற்றம்-சொல்லுதற்குத் தகாத அற்பவார்த்தைகளை, இன்னமும்-,
மாறுகின்றிலை-(சொல்லுவதினின்றும்) நீங்குகின்றாயில்லை: (நீ இவ்வாறு
இருந்தால்), மன் உயிர் யாஉம் வந்து ஆறுகின்ற குடை நிழல் வேந்தனுக்கு -
(உலகத்தில்) நிலைபெற்ற பிராணிகளெல்லாம் வந்து இளைப்பாறுதற்கு இடமான
வெண்கொற்றக்குடைநிழலையுடைய விராடனுக்கு, அழிவு - நாசத்தை, செய்தி -
செய்கின்றவனாவாய்: நீ-, அறிவிலி போலும் - அறிவுகெட்டவன் போலக்
காண்கின்றாய்;

     பிறனில்லாளை விரும்புவதனால் இம்மையிற் பழியும் மறுமையிற்
பாவமும்விளையு மாதலால், 'இம்மைதானும் மறுமையும் பார்த்திலை' என்றாள்:
இதில்இம்மையில் என்கணவனாலிறந்து மறுமையில் தீவினையும் நுகர்வாயென்ற
பொருளும் தோன்றும்.  இவனுடைய அநியாயத்தால்.  அரசனுக்கே
தீங்குவிளையக் கூடு மென்று அஞ்சினாள்.  ஏறுகின்ற -'அன்'
சாரியைபெறாதமுற்று.                                            (58)