பக்கம் எண் :

48பாரதம்விராட பருவம்

    நீ சொல்லுகிற வார்த்தையைத் தட்டாமற் செய்யவேண்டுவது
பணிப்பெண்ணாகிய எனக்குக் கடமையென்று செய்கிறேன்:  ஆனாலும்,
இதனால் உன்னுடைய தம்பிமார்க்கு நாசமே விளையும்: இதனையறிந்திலை
யென்று மேல்விளையப் போவதை ஆராய்ந்து திரௌபதி கூறின ளென்க.
ஆரம்-கண்ணீருக்கு, உவமவாகுபெயர்.  சுதேஷ்ணை 'எனக்குத் தாகமாக
இருத்தலாற் பருகுமாறு சுரையை இந்தப்பாத்திரத்தில் வாங்கிவருக' என்று
வண்ணமகளை நோக்கிக்கூற, அன்னாள் தடுத்துப்பேச, அந்த இராணி
கட்டாயப்படுத்தியனுப்பினாளென்று முதனூலி லுள்ளது.               (70)

19.-திரௌபதியைக்கீசகனிடத்துச் சென்று வரும்படியேவிய
சுதேட்டிணையைக் குறித்த கவிக்கூற்று.

ஆண்டுவந்ததுருபதன்மாமகளடைந்தநாட்டொட்ட
                                    மரரொரைவரே,
தீண்டலன்றியொருவருமென்னைமெய்தீண்டுவாரிலையென்றென்று
                                       செப்பவும்,
நீண்டசெங்கைத்தரணிபன்காதலிநினைவிலாமனெறியற்ற
                                       தம்பிபால்,
மீண்டுமவ்வழியேகென்றுரைப்பதேவிதியையாவர்விலக்க
                                      வல்லார்களே.

      (இ -ள்.) ஆண்டு வந்த-அப்போது வந்த, துருபதன் மா மகள் -
துருபதனுடைய சிறந்த மகளாகிய திரௌபதி, அடைந்த நாள் தொட்டு - (தான்
விராடன்மனைவியிடம் வண்ணமகளாகிச்) சேர்ந்த நாள்முதல், 'அமரர் ஒர்
ஐவர் ஏ தீண்டல் அன்றி - ஐந்துகந்தருவ தேவர்களே (தன்னைத்)
தீண்டுவதன்றி, ஒருவர்உம் - வேறொருத்தரும், என்னை-, மெய்தீண்டுவார்
இலை-,' என்று என்று செப்பஉம் - என்று பலமுறை சொல்லியிருக்கவும்,-
நீண்ட செம் கை - (முழந்தாளளவும்) நீண்டுள்ள செவ்விய கையையுடைய,
தரணிபன் காதலி - விராடமன்னவனுடைய மனைவி, நினைவு இலாமல் -
ஆலோசனையில்லாமல், நெறிஅற்ற தம்பிபால் - ஒழுக்கங்கெட்ட தம்பியாகிய
கீசகனிடத்து, மீண்டும்-மறுபடியும், அ வழி-அவனுள்ள இடத்து, ஏகு -
ஏகுவாய், என்றுஉரைப்பதுஏ - என்று (திரௌபதியைநோக்கிச்) சொல்வதா?
[இது தகுதியன்று என்றபடி]: விதியை யாவர் விலக்க வல்லார்கள்-? (எ - று.)

     'விதியை யாவர் விலக்கவல்லார்கள்' என்ற பொதுப்பொருள் கீழ்க்கூறிய
சிறப்புப்பொருளைச் சமர்த்தித்ததனால், இது வேற்றுப்பொருள்வைப்பணி.  விதி
- திரௌபதி வியாஜமாகக் கீசகன் இறக்க வேணுமென்பது.         (71)

வேறு

20.-உதயகாலத்தில்திரௌபதி கீசகன் மனையிலேகுதல்.

மாதவள் கீசகன் மனையிலேகவற்
போதக லவுமவன் புலம்பல்போகவும்
பாதமில் வன்றிறற் பாகனூர்ந்ததேர்
ஆதப னுதயவெற் பணுகினானரோ.