பக்கம் எண் :

6பாரதம்விராட பருவம்

கசிவுபொருந்திய அன்போடு, 'நான் உம்மை காண்பது-, என்று-(மீண்டும்)
எப்போதோ?' என்று-, அவர் மனம் களிப்ப - அம்முனிவர்களுடைய மனம்
மகிழ்ச்சியடையும்படி, இனியன உரைகள் பயிற்றி - இனிமையான
வார்த்தைகளைச் சொல்லி,- யாவரைஉம் ஏகுவித்து - எல்லோரையும் (தங்கள்
தங்களுடைய வாழிடத்திற்குச் செல்லுமாறு விடைகொடுத்து) அனுப்பிவிட்டு,
'இற்றை நாள் இரவில் - இன்றைத்தினம் இராத்திரிப்போதில், தினகரன் எழும்
முன் - சூரியன் உதிப்பதற்குமுன்னே, அ செல்வம் திகழ்தரு நகர்க்கு -
செல்வம் விளங்குகின்ற அந்த அழகிய பட்டணத்திற்கு, செல்வம் -
போவோம்,' என செப்பா-என்று சொல்லி,- (எ - று.)- "வளநாடடைந்தனன்
பாண்டவர் தலைவன்" என அடுத்த செய்யுளோடு முடியும்.

      தினகரன்- தன்னுதயத்தாற் பகலையுண்டாக்குபவன் எனக்காரணக்குறி,
செல்வமச்செல்வம் - பிராசம். தபோதனத்தவரை யென்றும் பாடம்.    (6)

7.-தருமன் தம்பியரோடும் திரௌபதியோடும்மச்சநாட்டை
யடைதல்.

கல்கெழுகுறும்புஞ்சாரலங்கிரியுங்கடிகமழ்முல்லையும்புறவும்
மல்குநீர்ப்பண்ணைமருதமுங்கடந்துவன்னியிற்பிறந்தமாமயிலும்
வில்கெழுதடக்கையிளைஞருந்தானும்விராடர்கோன்றனிக்குடைநிழலில்
பல்குலமாக்கள்வாழ்வுகூர்வளநாடடைந்தனன்பாண்டவர்தலைவன்.

      (இ -ள்.) பாண்டவர் தலைவன் - பாண்டவர்கட்குள் முதல்வனான
தருமபுத்திரன்,-வன்னியில் பிறந்த மா மயில்உம் - அக்கினியில் தோன்றிய
சிறந்தமயில்போன்ற திரௌபதியும், வில்கெழு தட கை இளைஞர்உம் -
வில்பொருந்திய பெரியகைகளையுடைய தம்பிமாரும், தான்உம்-, கல்கெழு
குறும்புஉம் - கல்லொடுவிளங்குகின்ற காடும், சாரல் அம் கிரிஉம் -
தாழ்வரையோடு கூடிய அழகிய மலையும், கடிகமழ் முல்லைஉம்-மணம்
வீசுகின்ற முல்லைநிலமும், புறவுஉம் - கொல்லைகளும், மல்குநீர் பண்ணை
மருதம்உம் - மிக்க நீர்வளம்பொருந்திய விளைநிலத்தோடுகூடிய மருதநிலமும்,
கடந்து-, விராடர்கோன் தனிகுடை நிழலில் - விராடராசனுடைய ஒப்பற்ற
குடைநிழலிலே, பல்குலம் மாக்கள் வாழ்வுகூர் வளம் நாடு - பலகுலத்தவரான
மனிதரும் வாழ்ச்சிபெருகுகின்ற மச்சநாட்டை, அடைந்தனன்-; (எ - று.)

     குறிஞ்சியும் முல்லையும் திரிந்தது பாலையாகு மாதலின் இங்குப் பாலை
நிலத்தை 'கல்கெழுகுறும்பு' என்றாரென்னலாம்.  புறவு - முல்லையைச் சார்ந்த
நிலம்.  முதலிரண்டடிகளில் நெய்தல் தவிர, மற்றைய நான்குநிலங்களும்
கூறப்பட்டன.  துரோணாசாரியரால் தன்மாணவனைக்கொண்டுவென்று கட்டி
அவமதித்து விடப்பட்ட பாஞ்சால ராசனான யாகசேனன் தன்னைவென்ற
துரோணன்மாணவகனான