பக்கம் எண் :

104பாரதம்ஆதி பருவம்

     (இ-ள்.) அன்னம் மெல் நடை - அன்னப்பறவையின் நடை போன்ற
மெல்லியநடையையுடையபிரதை,- மெய்குலைந்து அலமர - உடம்பு நடுங்கிக்
குலைய,- நாணினாள் - நாணங்கொண்டு, இதயம் உம்வேறு ஆகி-,- அஞ்சினள்
- அச்சங்கொண்டவளாய், 'கன்னி கன்னி - (நான்) கன்னிகையாவேன்
கன்னிகையாவேன்: என் கை தொடேல் - என்கையைத் தீண்டாதே: மடந்தையர்
கற்பு - மடந்தைமாரின் கற்பை, நீ-, அறிகிற்றி- அறிவாயன்றோ!' என்ன -
என்று, அரற்றலும் - கதறவும்,- (சூரியன்), அருகு உறான் - (அவளுடைய)
சமீபத்தை யடையாதவனாய்,- விட போய் நின்று - சற்ற விலகிப் போயிருந்து,
(அந்தப்பிரதையைநோக்கி),- 'உன்னி- நினைத்து, என்னை-, நீ-, அழைத்தது-,
என் பெற - என்னபயனைப் பெறும் பொருட்டு?' என - என்று, உருத்தனன் -
கோபித்தவனாய்,- உரை செய்வான்- (பின்னுஞ்) சொல்பவனானான்; (எ-று.)   (188)

34.-இரண்டுகவிகள் - சூரியன் பின்னுங்கூறியன
தெரிவிக்கும்.

உருக்கொள்சாயையுமுழையுமங்கறிவுறா தொளித்துநான்வரவேநீ
வெருக்கொளாவெனைமறுத்தனையுனக்குமுன் மெய்ம்மறையுரைசெய்த
குருக்களென்படாரென்படாதரிவைநின் குலமெனக்கொடித்திண்டேர்
அருக்கன்மெய்யினுமன மிகக்கொதித்தன னாயிரமடங்காக.

     (இ-ள்.) 'உரு கொள் சாயைஉம் - உருவத்தைக்கொண்ட சாயா தேவியும்,
உழை உம் - உஷாதேவியும், அங்கு - வானில், அறிவுறாது - அறியாதபடி,
ஒளித்த-, நான்-, வரஏ - வந்திருக்கவும்-, நீ-, வெருக்கொளா - அஞ்சி, எனை -
என்னை, மறுத்தனை - (உடன்சேரவொட்டாமல்) மறுத்திட்டாய்: உனக்கு-
(இப்படிப்பட்ட) உனக்கு, முன் - முன்பு, மெய் மறை -
தவறாமற்பலிக்குந்தன்மையுள்ள வேதமந்திரத்தை, உரைசெய்த - சொல்லிய,
குருக்கள் - குருமார், என்படார் - என்னபாடு படமாட்டார்? [நீ இப்போது
மறுத்ததன் பயனாக உனக்கு உபதேசித்த குருமாரைச் சபித்திடுவேன் என்றபடி]:
அரிவை - பெண்ணே! நின் குலம் - நீ பிறந்தகுலம், என்படாது - என்ன தீங்கை
யடைந்திடாது [என் சாபத்தினால் நின்குலமே யழிந்திடும் என்றபடி] ', என -
என்று, கொடி திண்தேர் அருக்கன் - கொடி கட்டிய வலிய தேரையுடைய
சூரியன், மெய்யின்உம் - தன்னுடம்பைவிட, ஆயிரம் மடங்கு ஆக-, மிக -
மிகவும், மனம் கொதித்தனன்-; (எ-று.)

     உழை சாயையென்பவர் சூரியனுடைய மனைவிமாராவர். சாயை யென்பது -
நிழலென்னும்பொருளையு முடைய தாதலால், அதனினும் வேறுபாடு தோன்ற,
'உருக்கொள் சாயை' என்றது. "கரோமியாவத்தவ மந்த்ரதாயிநம் - மதீய
சாபோரகவேஷ்டிதம்முநிம்" என்று பாலபாரதத்தில் வருதற்கு ஏற்ப, 'மறையுரை
செய்தகுருக்களென்படார்' என்பதற்குச் சாபத்தினாலழிவ ரென்று
உரைக்கப்பட்டது.                                          (189)

35.உனையளித்தவன்முனியுமென்றஞ்சனீ யுடன்படுமுணர்வானல்
வினையளித்ததென்றணைதியேலின்பமும் விழைவுறும்படிதுய்த்தி
எனையளித்ததொல்லதிதியினுனக்கிசை யெய்துமாறிகன்மைந்த[ன்
தனையளித்திமற்றென்னினுமிருநிலந் தாடொழத்தக்கோனே.