39.-சூரன்பெண்ணாகிய குந்தி மகப்பெற்ற அப்புதல்வனை உலகப் பழிப்புக்கு அஞ்சி ஒருபெட்டியில் வைத்து நதிப் பெருக்கிலே விட்டிடுதல். சூரன்மாமகள்சூரனதருளினாற் றுலங்குகன்னிகையாகி வாரமாமணிக்கவசகுண்டலத்துடன் வருமகன்முகநோக்கிப் பாரமாமரபினிற்பிறந்தவர்மொழி பழுதினுக்கழுதஞ்சிப் பூரமாநதிப்பேடகத்திடைநனி பொதிந்தொழுக்கினண்மன்னோ. |
(இ-ள்.) சூரன் மா மகள் - சூரனுடைய சிறந்த பெண்ணாய் பிறந்த பிரதை, சூரனது அருளினால் - சூரியனுடைய கருணையினால், துலங்கு கன்னிகை ஆகி - விளங்குகின்ற கன்னிப்பருவத்தை யடைந்து, வாரம்- (தன்) அன்பிற்குரிய, மா மணி கவசகுண்டலத்துடன்வரும் மகன் - சிறந்தமணிகளழுத்திய கவசகுண்டலத்துடன் தோன்றிய மைந்தனுடைய, முகம் - முகத்தை, நோக்கி-, பாரம் மா மரபினில் பிறந்தவர் மொழி பழுதினுக்கு - பெருமைபெற்ற சிறந்தவமிசத்திலே பிறந்தவர் கூறும் பழிமொழிக்கு, அஞ்சி - பயந்து, அழுது-, பேடகத்திடை நனி பொதிந்து - பெட்டியிலே வைத்து நன்குமூடி, மா நதி பூரம் - சிறந்த நதியின் பெருக்கில், ஒழுக்கினள் - (தனக்கு அந்தரங்கரான தோழியர்மூலமாகச்) செலுத்தினாள்; (எ-று.) "ஸு ரஸ்ரவந்த்யாம் அபவாதசங்கிதா - ஸகீபி ராப்தாபி ரஸாவமோசயத்" என்று கங்கைப்பெருக்கில்விட்டதாகப் பாலபாரதமும் அசுவநதியிலே விட, அது சர்மண்வதி நதியிலும், அது யமுனையிலும், அதுகங்கையிலும் சேர்ப்பித்தனவாக வியாச பாரதமும் கூறும். (194) 40.-பாகீரதி அந்தப்பெட்டியைச் தலைமைச்சாரதியின் நகரிற்சேர்ப்பித்தல். குஞ்சரத்திளங்கன்றெனச்சாபவெங் கோளரியெனப்பைம்பொற் பஞ்சரத்திடைவருதிருமதலையைப் பகீரதியெனுமன்னை அஞ்சரத்திரைக்கரங்களாலெடுத்தெடுத் தசையவேதாலாட்டி வெஞ்சரச்சிலைச்சூதநாயகன்பதி மேவுவித்தனளன்றே. |
(இ-ள்.) குஞ்சரத்து இள கன்று என - யானையின் இளங்கன்று போலவும், பைம் பொன் பஞ்சரத்திடை வரு சாபம் வெம்கோள் அரி என - பைம்பொன்மயமான கூட்டினிடையே வருகின்ற குட்டியான கொடிய கொல்லுந்தன்மையுள்ள சிங்கம்போலவும், (பெட்டியிலிருந்தபடியே வந்த), திருமதலையை - சிறந்த அந்தக்குழந்தையை, பகீரதி எனும் அன்னை - பாகீரதி யென்கிற தாய், அம் சரம் திரை கரங்களால் - அழகிய சலிக்குந்தன்மையுள்ள அலையாகிறகைகளால், எடுத்து எடுத்து-, அசைய (ஊஞ்சலிலாடுவதுபோல்) அசையுமாறு, தாலாட்டி-, என்று ஏ-(ஆற்றில்விட்ட) அந்தத்தினத்திலேயே, வெம் சரம் சிலை சூத நாயகன் - கொடுஞ்சரங்களைக்கொண்ட வில்லை யேந்திய தேர்ப்பாகர் தலைவனான அதிரதனென்பானுடைய, பதி - நகரத்தில், மேவுவித்தனள் - சேர்பித்ததாள்;(எ-று.) |