ஸபோஜ மத்ராதிபகந்யகாஸக:- யயௌ வநம் ஹைமவதம் மஹா ரத:" என்று பாலபாரதத்தில் வருவதனாலும், கலைமானினம் முதலியவற்றை வேட்டையாடினா னென்று மேற்பாடலில் வருவதனாலும் இங்ஙன்பொருள் கூறப்பட்டது. கண்ணுற்ற - இடமகன்ற எனினுமாம். (201) 47.- பலமிருகங்களையும் பாண்டு வேட்டையாடுதல். கானத்திலுள்ளகலைமானினங் காட்சியாமா ஏனத்திரள்வெம்புலியெண்குடன் யாளிசிங்கம் தானப்பகடுமுதலாய சனங்களெல்லாம் மானச்சரத்தாற்கொலைசெய்தனன் வாகைவில்லான். |
(இ - ள்.) வாகைவில்லான் - வெற்றிமாலைசூடிய வில்லையேந்தியவனாகிய பாண்டு;- கானத்தில் உள்ள - காட்டிலிருக்கின்ற, கலை மான் இனம் - கலைமானின் கூட்டமும், காட்சி- (கண்ணுக்கு) அழகிய, ஆ மா - காட்டுப்பசுவும், ஏனம் திரள் - பன்றியின்கூட்டமும், வெம் புலி - கொடியபுலிகளும், எண்குடன் - கரடியுடனே, யாளி - யாளியும், சிங்கம் - சிங்கமும், தானம் பகடு - மதசலத்தையுடைய களிறும், முதல் ஆய - முதலாகிய, சனங்கள் எல்லாம் - (விலங்கின்) திரள்களையெல்லாம், மானம் சரத்தால் - பெருமைபொருந்திய அம்பினால், கொலைசெய்தனன் - வேட்டையாடினான்: (எ-று.)- கற்கியாமா என்று பிரதிபேதம். கூட்டமென்ற பொருளில், சனம் என்றார். (202) 48.-வேட்டையிளைப்பை இமவானினின்றுதோன்றிய வாயுபகவான்போக்குதல். மெய்யிற்றெறித்தகுருதித்துளி மேருவில்லி சையத்தலர்ந்தகமழ்குங்குமத் தாதுமானக் கையிற்சிலையோடுலவுங் கழற்காளைகேதம் பையத்தணித்தானிமநாக பவனனென்பான். |
(இ-ள்.) (வேட்டையாடுகையில்), மெய்யில் - உடம்பிலே, தெறித்த-, குருதி துளி - இரத்தப்பொட்டு, மேருவில்லி சையத்து அலர்ந்த கமழ் குங்குமம் தாது மான - மேருவைவில்லாகக் கொண்ட சிவபிரானுடைய கைலாசமலையிலே மலர்ந்த நறுமணம் வீசுகின்ற குங்குமப்பூவின் இதழையொத்துத் தோன்ற,- கையில் சிலையோடு உலவும் கழல் காளை - கையிலே வில்லுடனே உலாவுகின்ற வீரக் கழலையணிந்த காளைப்பருவத்தானாகிய அந்தப் பாண்டுவின், கேதம் - (வேட்டையாடியதனாலுண்டாகிய) இளைப்பை, இமநாகம் பவனன் என்பான் - இமயமலையினின்றுதோன்றிய வாயுபகவான், பைய - மெல்ல, தணித்தான்-; (எ-று.) வெண்ணிறவுடம்பிற் செந்நிறக்குருதித்துளி சிந்தியது - வெள்ளிமயமான கைலாஸமலையிற் குங்குமப்பூவின் தாது சிந்தியதை யொக்கும்: பவனனென்பான், என்பான் - முதல்வேற்றுமைச் சொல்லுருபு. பவனன் என்பதற்கு ஏற்ப, தணித்தானென ஆண்பாற் பயனிலை வந்தது. சையம் - சைலமென்பதன் திரிபு: ஸஹ்யமென்பதன் திரிபு என்றால், சிறப்புப்பெயர் பொதுப்பொருளில் வந்ததென்க. (203) |