49.-மானுருவங்கொண்டு கிரீடித்த கிந்தமனென்ற முனிவனைப்பாண்டுமன்னன் அம்பினால் விழுத்தல். பொன்னங்கழலானெதிரவ்விடைப் போகம்வேட்டு மன்னுங்கலையும்பிணைமானு மகிழ்ச்சிகூர மின்னுங்கணையாலிவனெய்திட வீழ்ந்தபோதின் முன்னின்றதந்தவுயிர்வந்தொர் முனிவனாகி. |
(இ-ள்.) அ இடை - அவ்விடத்து, அம் பொன் கழலான்எதிர் - அழகிய பொற்கழலைப்பூண்டவனான அந்தப்பாண்டுவின்எதிரிலே, போகம வேட்டு - புணர்ச்சியை விரும்பி, மன்னும் - வேடம்பூண்ட, கலைஉம் - ஆண்மானும், பிணைமான்உம் - பெண்மானும், மகிழ்ச்சிகூர- மகிழ்ச்சி மிகாநிற்க,- இவன் - இந்தப்பாண்டு, மின்னும் கணையால் - ஒளிவிடுகின்ற அம்பினாலே, எய்திட - (கலைமான்மீது) தொடுத்து விட, (அதனால்), வீழ்ந்த போதில் - விழுந்தபொழுதில், அந்த உயிர் - இறந்திடும் அந்தப்பிராணி, ஒர் முனிவன் ஆகிவந்து முன் நின்றது-; (எ-று.) 'போகம்வேட்டு மகிழ்ச்சிகூர' என்றமையால், அவ்விரண்டும் புணர்ச்சியின்பத்தி லாழ்ந்திருந்த தென்பதும், வீழ்ந்தபோது முனிவனாகி முன்னின்ற தென்றமையால், இந்தப் பாண்டுவின் அம்புபட்டது கலைமானின்மே லென்பதும் பெறப்படும். (204) 50.-இதுவும் அடுத்தகவியும் - ஒருதொடர்: மானுடவடிவம் ஆன முனிவன் தன் வரலாறுகூறி மன்னவனைச் சபித்தமை தெரிவிக்கும். நாரிக்கொருகூறரனார்முத னல்கவெய்த வேரிக்கணையான்மிகநொந்துழி வேடமாறிப் பூரித்தகாமநலமெய்தும் பொழுதுநின்கைச் சோரிக்கணையாலறையுண்டுயிர் சோர்ந்துவீழ்ந்தேன். |
(இ-ள்.) நாரிக்கு ஒரு கூறு அரனார் - உமாதேவிக்கு (த் தமது) வாமபாகத்தைக் கொடுத்தவரான சிவபிரான், முதல் - முற்காலத்திலே, நல்க (நெற்றிவிழிக்கனலால் எரிப்புண்ட மன்மதனை) அருள் செய்து பிழைப்பிக்கவே, (அந்தமன்மதன்), எய்த-, வேரி கணையால்- தேனைக்கொண்ட மலரம்புகளினால், மிகநொந்த உழி - மிகவும் (உடல்) நொந்ததனால், (நான்), வேடம் மாறி - மானுஷவேஷம்மாறி, (மான் வேஷத்தைக்கொண்டு), பூரித்த காமம் நலம் - மிக்க காமசுகத்தை, எய்தும் பொழுது - அடைந்தபோது, நின் கை சோரி கணையால் - உன்கையிலுள்ள இரத்தக்கறையுள்ள அம்பினாலே, அறையுண்டு - மோதப்பட்டு, உயிர்சோர்ந்து - உயிர்தளர்ந்து [இறந்து], வீழ்ந்தேன்-வீழ்ந்திட்டேன்;(எ-று.) நாரிக்கொருகூறரனார் முதனல்கவெய்தவேரிக்கணை யென்றதனால், கடவுளரையும் மயக்கவல்லது அந்தமன்மத பாணமென்க. (205) 51. | என்போலவின்பத்திடைநீயு மிறத்தியென்னா அன்போடிறந்தான் முதற்கிந்தம னானபேரோன் தன்போன்மகிழ்நனுடனே செந்தழலினெய்திப் பின்போயினன்மென்பிணையானவப் பேதைதானும். |
|