(இ-ள்.) என்போல - என்போலவே, இன்பத்திடை - காமவின்பத்தை யனுபவிக்கும்போதில்தானே, நீ உம்-, இறத்தி - இறந்திடுவாய், என்னா- என்று, அன்போடு - காதலோடு, கிந்தமன் ஆன பேரோன் - கிந்தமனென்று பேரையுடைய அம்முனிவன், இறந்தான்-; மெல் பிணை ஆன அ பேதை தான்உம் - (ஆண்மானான அந்தக் கிந்தமனோடு கிரீடிக்கும்பொருட்டு) மெல்லியபெண்மானான அந்த அவன் மனைவியும், தன்போல் மகிழ்நனுடனே- தனக்கு ஒத்த கணவனுடனே, செந் தழலின் எய்தி - செந்நிறத்தீயிற் சேர்ந்து, பின் - (அவனைத்) தொடர்ந்தே, போயினள்-;(எ-று.) கிந்தமுனிவன் பாண்டுவுக்குச் சாபங்கொடுத்து இறந்தபின் அவன் மனைவி சிதையடுக்கி அதில் அவனுடம்பையேற்றி நெருப்பு வைத்து அத்தழலில் தன்னுடம்பை நீத்தாளென்க. கணவனுடன் தீப்பாய்ந்தவர், அவன்புக்க உலகம் புகுவரென்பது இங்கு அறியத்தக்கது. (206) 52.-இதுவும் அடுத்தகவியும் - பிறகு பாண்டு பத்தினிமா ரோடுதபோவனஞ்சேர்ந்து அருந்தவஞ் செய்தமை கூறும். நினைவற்றசாபநிலைபெற்றபி னெஞ்சின்வேறோர் இனைவற்றுநன்மையிதுவேயினி யென்றுதேறி மனைவைத்தகாதன்மடவாருடன் மன்றல்வேந்தன் முனைவைத்தவாய்மைமுனிக்கான முயன்றுசேர்ந்தான். |
(இ-ள்.) நினைவு அற்ற - நினைவு நீங்கிய [புத்திபூர்வகமாக வல்லாமற் செய்த செயலின் பயனாகநேர்ந்த], சாபம் நிலை - சாபத்தின் நிலைமையை, பெற்ற பின் - அடைந்தபின்,- நெஞ்சின் - (தன்) மனத்திலே, வேறு ஓர் இனைவு அற்று - வேறொரு வருந்தத்தக்க விஷயத்தை யெண்ணுதலைத் தவிர்ந்து, இனி நன்மை இது ஏ என்று தேறி - இனி (நமக்கு) நன்மை தருவது இந்தத்தவநெறியே யென்று தெளிந்து,- காதல் வைத்த மனை மடவாருடன்- (தன்னாற்) காதலிக்கப்பெற்ற மனைவிமாருடனே, மன்றல் வேந்தன்- (அவர்களை) மணஞ்செய்துகொண்டவனான பாண்டுராசன், முனை வைத்த வாய்மை - (நல்லவற்றுள்) முதன்மையாக் கணிக்கப்பட்ட மெய்ம்மையையுடைய, முனி - இருடிக்குரிய, கானம் - காட்டை, முயன்று -(தவத்தில்)முயற்சியெடுத்துக்கொண்டு, சேர்ந்தான்-; நன்மைபெறுதற்குரியமார்க்கம் தவமே யென்ற காரணத்தால், நன்மை யிதுவேயினியென்றுதேறினான். "யாமெய்யாக்கண்டவற்றுளில்லையெனைத் தொன்றும், வாய்மையினல்லபிற" என்ப ஆதலால், 'முனைவைத்தவாய்மை' என்றாரென்னலாம். "நிராசா பரமம் ஸு கம்" என்றபடி ஆசையையொழிக்கவே துன்பம் நீங்கி இன்பமுண்டாகுமாதலால், ஆசையையொழித்து என்ற பொருளில், 'நெஞ்சின்வேறோரினைவற்று' என்றது. மனைவிமாரைத்துறந்து தவஞ்செய்யவிரும்பிய பாண்டுமன்னன் அம்மனைவியரின் வேண்டுகோளினால் அன்னாருடன் தவஞ்செய்யச் செல்லலா |