பக்கம் எண் :

116பாரதம்ஆதி பருவம்

எல்லை - தினந்தோறும் ஏறிவருதற்கு இடனான பொழுது,- (ஒருகால்), மை வாள்
நெடுங் கண் - மை தீட்டியதும் வாள்போன்ற வடிவினதுமாகிய
நீண்டகண்ணைப்படைத்த, வர சூரன் மகளை நோக்கி - சிறந்தவனான
சூரனுக்குப்புத்திரியான குந்தியைநோக்கி, செவ் வாய் மலர்வான்- (தன்னுடைய)
சிவந்த வாயைத் திறந்து பேசுபவனானான்;

     பாண்டுமன்னவன் சதசிருங்கபருவதத்திற் கடுந்தவம் புரியா நிற்கையில்,
ஆங்குள்ள முனிவரோடும் நட்புக்கொண்டிருந்தான். ஒருகாலத்துச் சில இருடியர்
பிரமலோகத்துக்குத் திரண்டு போகலானார்கள்: அதுகண்ட பாண்டு
'மகப்பேறில்லாதவனாயினும் நான் செய்யும் பெருந்தவத்தாற் பிரமலோகம்
புகுவேன்' என்றானாக, அங்கிருந்த இருடியர் 'உனக்கு மகவுண்டாகும் என்பதை
நாங்கள் ஞானக்கண்ணா லறிந்துள்ளோம்' என்று கூறிச் சென்றனர்: பிறகு
'முனிவனது சாபத்தைப்பெற்ற எனக்கு மகவு எப்படி யுண்டாகும்?' என்று
பாண்டுமன்னவன் சிந்தையிலாழ்ந்திருந்தான்: அக்காலத்து வியாச முனிவரைப்
பூசித்ததன் பயனால் காந்தாரி கருக்கொண்டாள்: அதை யறிந்து பாண்டு மிக்க
வருத்தங்கொண்டு, பிறகு, புத்திரரைப் பெற வேணுமென்று விருப்பம்மிக,
பத்தினிமாரை நோக்கிச் சொல்லலானானெக் கதாசந்தர்ப்பம் காண்க.    (212)

58.-இதுமுதல்மூன்றுகவிகள்-பாண்டுமன்னவன்குந்திதேவி
 யினிடம்மகப்பேற்றின் சிறப்பைச் சொல்லுதலைக்கூறும்.

பூந்தார்வியாதமுனிதாளிணை போற்றியன்பு
கூர்ந்தார்வமுற்றியவன்பால்வரங் கோடலெய்திக்
காந்தாரிநூறுமகவான கருப்பமொன்று
வேந்தாதரிக்கத்தரித்தாள் வடமீனொடொப்பாள்.

ஐந்து கவிகள் - ஒருதொடர்.

     (இ - ள்.) பூந் தார் வியாதமுனி தாள் இணை போற்றி - அழகிய
தாமரைமாலையையணிந்த வியாசமுனிவனுடைய உபய பாதங்களைத் துதித்து,
அன்பு கூர்ந்து -அன்பு மிக்கு, ஆர்வம் முற்றி - பக்திமிகுந்து, அவன் பால் -
அந்தமுனிவனிடத்தில், வரம் கோடல் எய்தி - வரம் பெறுதலை யடைந்து,
வடமீனொடு ஒப்பாள் - அருந்ததி போல்பவளாகிய, காந்தாரி-,-
(அவ்வரத்தின்பயனாக)-, நூறு மகவு ஆன கருப்பம் ஒன்று -
நூறுமகவைக்கொண்டதான ஒரு கருப்பத்தை, வேந்து ஆதரிக்க - திருதராட்டிரன்
ஆதரம்பொருந்த, தரித்தாள் - தாங்குபவளானாள்; (எ-று.)

     நீயும் அந்தக்காந்தாரிபோலவே கருப்பத்தைத் தாங்கவேணுமென்று மேலே
குறிக்கப்போவதனால், இங்கு இச்செய்தி கூறப்பட்ட தென்னலாம்.       (213)

59.கல்லாமழலைக்கனியூறல் கலந்துகொஞ்சுஞ்
சொல்லாலுருக்கியழுதோடித் தொடர்ந்துபற்றி
மல்லார்புயத்தில்விளையாடு மகிழ்ச்சிமைந்தர்
இல்லாதவர்க்குமனைவாழ்வி னினிமையென்னாம்.