8.- புதன் அந்த இளையைக் கண்டு காதலித்து அவளைக் கூடுதல். மாரகாகளமெழுவதோர் மதுமலர்க்காவில் தாரகாபதிபுதல்வனத் தையலைக்காணா வீரகாமபாணங்களின் மெலிவுறமயங்கித் தீரகாமமுஞ்செவ்வியு மிகும்படிதிளைத்தான். |
(இ - ள்.) மாரன்காகளம் - மன்மதனதுவெற்றிச்சின்னமாகிய குயிலின் ஓசை, எழுவது- (தன்னிடத்து) ஓக்கம்பெற்றிருப்பதாகிய, ஓர் மதுமலர் காவில் - ஒப்பற்றதேன்நிறைந்த மலர்களைக்கொண்ட சோலையிலே, தாரகாபதி புதல்வன் - சந்திரனுக்குப்புத்திரனாகிய புதனென்பவன், அ தையலை காணா - அந்த இளையென்றபெண்ணைக்கண்டு, வீரம்காமம்பாணங்களின் - வீரத் தன்மையையுடைய காமபாணங்களினாலே, மெலிவுஉற - (தன்உடம்பு) மெலிவடைய,- மயங்கி - புத்தியில்மோகங்கொண்டு, தீரம் காமம்உம் - மிக்க காமமும், செவ்விஉம் - அழகும், மிகும்படி- (அத்தையலுக்கு) மிகுமாறு, திளைத்தான்- (அவளைக்) கூடினான்; (எ -று.) காகளம் - ஒருவகையூதுகருவி: குயில் மன்மதனுக்குக் காகள மெனப்படும்: இங்கு அச்சொல் - மன்மதனது ஊதுகருவியாகக்கொள்ளப்படும் குயிலைக்காட்டி, ஆகுபெயராய், அந்தக்குயிலினோசையைக் காட்டிற்று. (16) 9.- புதனுக்கும் இளைக்கும் புதல்வனாகப் புரூரவா தோன்றுதல். புதனுமந்தமென்பூவையும் புரூரவாவினைத்தஞ் சுதனெனும்படிதோற்றுவித் தனரவன்றோன்றி இதநலம்பெறுமழகினுந் திறலினுமிலங்கி மதனனுங்கலைமுருகனு மெனும்படிவளர்ந்தான். |
(இ - ள்.) புதனும்-, அந்த மெல் பூவைஉம்- அந்தமெல்லிய பூவைபோன்ற இளையும், புரூரவாவினை - புரூரவஸ்என்பவனை, தம் சுதன் எனும்படி - தம்முடையபுதல்வனென்று (யாவரும்) சொல்லும்படி, தோற்றுவித்தனர் - உண்டாக்கினார்கள்:அவன் - அந்தப்புரூரவசு, தோன்றி - பிறந்து, இதம் - நன்மைக்குணத்துடனே,நலம்பெறும் அழகின்உம் - சிறப்புப்பொருந்திய அழகிலும், திறலின்உம் -வலிமையிலும், இலங்கி - விளங்கி, மதனன்உம் - மன்மதனும், கலை முருகன்உம் -போர்க்கலையில்வல்ல முருகக்கடவுளும், எனும்படி - என்று (கண்டோர்) கூறும்படி,வளர்ந்தான்-; (எ - று.) அழகிற்கு மன்மதனும், அழகு திறல் என்ற இரண்டிற்கும் முருகக்கடவுளும் உவமையாவர்: இனி, மெல்லிய மலர்களைக்கொண்டு மூவுலகத்து ஆடவர் மகளிரையெல்லாம் வெல்லும் வல்லமை பெற்றுள்ளான் மன்மதனென்ற காரணத்தால், அழகு திறல் என்ற இருதன்மையிலுமே இருவரும் உவமையாவரென்றலும் ஒன்று. பின்னிரண்டடியை முறைநிரனிறையாகக் கொள்வாருமுளர். பூவை - நாகணவாய்ப்புள்: அதுபோல் இன்குரலையுடைய பெண்ணுக்கு, உவமவாகுபெயர். |