பக்கம் எண் :

120பாரதம்ஆதி பருவம்

குந்தித் தெரிவை நிறைமாமதிக் கூட்ட முற்ற
அந்தித் தெரிவை நிகரென்ன வழகின் மிக்காள்.

     (இ-ள்.) வந்தித்த - (தான் மந்திரத்தினால்) வணங்கிய, தெய்வம்-, எதிர்
வந்தஉழி - எதிரேவந்தபோது, குந்தி தெரிவை - குந்தியென்ற பெண்,- மன்னு -
பொருந்திய, கேள்வன்- (தன்) கணவனை, சிந்தித்த - எண்ணிய, சிந்தையினள்
ஆய் - எண்ணமுடையவளாய்,- மலர் சேக்கை சேர்ந்து - மலர்ப்படுக்கையிற்
சேர்ந்திருந்து,- நிறை மா மதி கூட்டம் உற்ற - பதினாறுகலைகளும் நிரம்பிய
சிறந்த சந்திரனோடு சேர்தலைப்பொருந்திய, அந்தி தெரிவை நிகர் என்ன -
மாலைச் சந்தியாகிய பெண்ணுக்கு உவமையாவளென்னும்படி, அழகில் மிக்காள் -
அழகினால் மேம்பட்டவளானாள்;(எ-று.)                            (221)

வேறு.

67.- தருமபுத்திரன் பிறத்தல்.

சிவமுற முகூர்த்தம் வாரந் தினந்திதி காரணம் யோகம்
நவமென வழங்கு கோளு நன்னிலை நின்ற போதில்
அவனியை யொருகோ லோச்சி யாளுமென் றறிவின் மிக்க
தவநெறி முனிவர் கூறப் பிறந்தனன் றருமன் மைந்தன்.

    (இ-ள்.) முகூர்த்தம் - முகூர்த்தமும், வாரம்-வாரமும், தினம் -
நட்சத்திரமும், திதி - திதியும், கரணம் - கரணமும், யோகம் - யோகமும்,
(ஆகிய இவை), சிவம் உற - மங்களகரமாகப்பொருந்த,- நவம் என வழங்கும் -
ஒன்பது என்று சொல்லப்படுகின்ற, கோள்உம் - கிரகங்களும், நல் நிலை நின்ற
போதில் - நன்மையைத்தரக்கூடிய இடத்திலிருக்கையில்,-அவனியை ஒரு கோல்
ஓச்சி, ஆளும் என்று அறிவின் மிக்க தவம் நெறி முனிவர் கூற - இந்தப்பூமியை
(த் தன்) ஒப்பற்ற செங்கோலைச் செலுத்தி ஆள்வான் என்று அறிவினால் மிக்க
தவநெறியையுடைய முனிவர் சொல்ல,- தருமன் மைந்தன் பிறந்தனன் -
தருமபுத்திரன் பிறந்தான்; (எ-று.)

     பாவஞ்செய்வாரை நரகத்திற்செலுத்தித் தருமத்தை நிலை நிறுத்தலால்,
யமன் தருமன் எனப்படுவான்; இந்த மகன் அந்தத் தருமனுடைய அருளாற்
பிறந்தவ னாதலால், இவனைத் தருமபுத்திரனென்றே உலகோர் வழங்குவர்:
இவன் பெயர், யுதிஷ்டிரன்: இவன், ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில்
பஞ்சமியன்று கேட்டை நட்சத்திரத்தில் அபிசித்திற் பிறந்தா னென்று முதனூல்.

     இனி முப்பத்துமூன்று கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றைய மாச்சீர்களுமாகிய அறுசீராசிரிய விருத்தங்கள். (222)

68.- யுதிஷ்டிரன் பிறந்தபோது நன்னிமித்தம் தோன்றுதல்.

உதிட்டிரன்பிறந்தகாலை யுலகினிலுயர்ந்தோர்யாரும்
வதிட்டனைமுதலாவெண்ணு முனிவரும்வானுளோரும்
நிதிப்பயன்பெற்றார்போல, நேயமோடுவகைகூர்ந்தார்
மதித்தநன்னிமித்தம்யாவு மங்கலநிகழ்ந்தவன்றே.